வெள்ளி, அக்டோபர் 31 || எனது எல்லாமே என் கர்த்தருக்கே?
- Honey Drops for Every Soul

- Oct 31
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: 1 கொரிந்தியர் 9: 19-23
... அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். - 1 கொரிந்தியர் 9:19
தங்கள் அயராத உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பினால் அநேக ஆத்துமாக்களை ஆவியானவரது உதவியுடன் மிஷனரிகள் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்துகின்றனர்.
ஜான் பேட்டன் அப்படிப்பட்ட மிஷனரிகளில் ஒருவர். ஜான் பேட்டன் தன் வாழ்வை மிஷனரிப்பணிக்கு அர்ப்பணித்தார். பல தடைகளைத் தாண்டி, ஜான், மனைவி மேரியுடன் தனது முப்பத்தி நான்காவது வயதில் ஹெப்ரைட்ஸ் என்ற இடத்திற்குச் சென்றார். ஆவியானவரது துணையுடன் அங்கே இருந்தவர்களோடு சிறிதுசிறிதாக நட்புகொள்ள ஆரம்பித்தார். கர்த்தர் ஜான் தம்பதியருக்கு ஒரு குழந்தையையும் கொடுத்தார். சில காலத்திற்குப் பின் அவர்களது வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. மேரி ஒரு விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சரியான மருத்துவ வசதி கிட்டாத நிலையில் மரித்துப்போனார். அதற்குப்பின் சரியாக ஒரே வாரத்தில் குழந்தையும் மரித்துப்போனது. பேட்டன் தனது கரங்களாலேயே அவர்களை அடக்கம் செய்ய நேரிட்டது. ஆதிவாசிகள் அவரை மாந்திரீகம் வைத்துக் கொலைசெய்ய முயன்றபோதும் அவருக்கு ஒன்றும் ஆகாததைக் கண்ட அநேகர் பேட்டனின் கடவுளாகிய இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர். நாட்கள் செல்லச்செல்ல அந்த தீவு முழுவதும் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டது. பேட்டன் பல சபைகளை நிறுவினார். பள்ளிகளை ஆரம்பித்தார். 1909ம் ஆண்டில் அவர் மரிக்கும் முன்பதாக ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர்.
நண்பர்களே, மக்களை ஆண்டவரிடத்தில் கொண்டுவர நாம் ஒரு தீவுக்குதான் செல்லவேண்டுமென்பதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே அதைச் செய்யலாம். ஒரு முடிவை எடுத்து நாம் செயல்பட ஆரம்பித்தால் ஆவியானவர் நமக்கு துணை செய்வார். ஆயிரங்களை ஆண்டவருக்கு சொந்தமாக்க நம் கடைசி மூச்சுவரை உழைப்போம். ஜெபம்: பிதாவே, உமக்கு ஊழியம் செய்ய என்னை நீரே தெரிந்தெடுத்தீர். உமது அழைப்பை நான் உதாசீனம் செய்யாமல் அழிந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களுக்காக பாரத்துடன் உழைக்க, ஆயிரங்களை உமக்குச் சொந்தமாக்க உமது ஆவியானவரின் துணையை எனக்குத் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments