ஞாயிறு, ஜனவரி 25 || வன்முறையாளர்களிடமிருந்து காத்துக்கொள்ளும்!
- Jan 25
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: 1 சாமுவேல் 17 : 45-51
கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச்சந்ததிக்கு விலக்கிக்காத்துக்கொள்ளுவீர். - சங்கீதம் 12:7
பெலிஸ்தியனான கோலியாத் இஸ்ரவேலின் சேனையை நிந்தித்தான் என்பதைக் கேள்விப்பட்ட தாவீது மனமுடைந்தான். சவுலிடம் சென்று, இவன் நிமித்தம் யாருடைய இருதயமும் கலங்கவேண்டாம். நான் போய் அவனுடன் யுத்தம் பண்ணுவேன் என்றான். தனது சொந்த பெலத்தின்மேல் தாவீது நம்பிக்கை கொண்டிருந்தான் என்று இதற்கு அர்த்தமல்ல; மாறாக, ஜீவனுள்ள தேவனுடைய பெலத்தைச்சார்ந்துதான் அவன் இப்படிக் கூறினான். கோலியாத்தை ஒரு மிருகத்துக்கு ஒப்பாக தாவீது கண்டபடியால் சவுலிடம், ஒருவிசை சிங்கத்தையும் இன்னும் ஒருமுறை கரடியையும் நான் கொன்றுபோட்டேன். ஜீவனுள்ள தேவனை நிந்தித்த, விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனான கோலியாத்தையும் மிருகத்தைப்போலவே கொன்றுபோடுவேன் என்று கூறியதை நாம் 1 சாமுவேல் 17:34 - 36ல் வாசிக்கலாம். சவுல் தந்த கனமான கவசம் மற்றும் பட்டயத்தை அவன் களைந்து எறிந்துவிட்டு, அவன் ஐந்து கூழாங்கற்களையும் மேய்ப்பனின் கோலையும் எடுத்துச்சென்று ராட்சதனான கோலியாத் முன் நின்றான். கோலியாத் ஏளனமாகப் பேசியபோதும் அவன் பயப்படாமல், நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் எண்னிடத்தில் வருகிறாய், நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன் என்று சவால் விட்டான் (வச. 45). தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின்மீது அவன் சார்ந்திருந்ததுதான் தாவீதினுடைய பெலன்! தேவனுடைய குணாதிசயத்தையும் உண்மைத்துவத்தையும் அந்த நாமம் வெளிப்படுத்துகிறது; தம் ஜனங்கள் தம்மேல் சார்ந்துகொள்ளவேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம். தாவீது தம்மீது வைத்திருந்த நம்பிக்கை, வைராக்கியத்தைக் கர்த்தர் கனப்படுத்தினபடியால், அவன் எறிந்த முதல் கல் கோலியாத்தின் நெற்றியைத் துளைத்து, அவனை முகங்குப்புற விழச்செய்தது!
அன்பானவகளே, தீய சக்திகள் நம்மைச் சூழ்ந்தாலும், நாம்தனியாய் இல்லை, நம்மைப் பாதுகாத்து ஜீவனோடு வைப்பதற்காகவே ஆண்டவர் நம்முடனே இருக்கிறார் என்பதை நினைவில் வைப்போம். அவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு மட்டும் வைராக்கியமாயிருக்க கவனமாயிருப்பதே நாம் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று!ஜெபம்: தேவனே, கோலியாத்தாக்க வந்தபோது, நீர் தாவீதைப்பலப்படுத்தி, முதலிலேயே அவனை வீழ்த்தும்படி தாவீதைப்பலப்படுத்தினீர்; தாவீதைப் பலம்வாய்ந்த எதிரியிடமிருந்து பாதுகாத்தீர். தாவீதைப்போல நானும் எதிர்ப்புகள் வரும்போது உம்மை நம்பி, வைராக்கியமாய் நிற்க எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments