வெள்ளி, ஜனவரி 23 || அவர் தமது பிள்ளைகளின் ஜீவனைப் பாதுகாக்கிறவர்!
- Honey Drops for Every Soul

- Jan 23
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: சங்கீதம் 64: 1 : 10
என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும்
பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும். - சங்கீதம் 64:1
மீதியானியர்களிடம் யோசேப்பை அவன் சகோதரர்கள் விற்றபோது அவனுக்குப் பதினேழு வயது. அந்த மீதியானியர் போத்திபாரிடம் அவனை விற்றனர். கர்த்தர் அவனோடுகூட இருந்ததால் தனது எஜமானது கண்களில் யோசேப்புக்கு தயவு உண்டானது; அவன் தன் வீட்டுக்காரியங்கள் அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பை யோசேப்புவிடம் கொடுத்தான். ஒருநாள், அவன்மேல் பொய்க்குற்றம் சாட்டப்பட்டதால் அவன் சிறையில் அடைக்கப்பட்டான். அங்கும்கூட தேவன் அவனோடு இருந்தார். ஆகையால் சிறைச்சாலைத் தலைவனின் கண்களிலும் அவனுக்குத் தயவு கிடைத்தது. அது மாத்திரமல்ல. கர்த்தர் அவனுக்குக் கொடுத்திருந்த வரத்தினால், பார்வோனின் பானபாத்திரக்காரனுடைய சொப்பனங்களுக்கு விளக்கம் சொல்லும் சந்தர்ப்பமும் அங்கு கிடைத்தது. யோசேப்பின் விடுதலைக்காகப் பார்வோனிடம் பேசுவதாக வாக்களித்த பானபாத்திரக்காரன் அதை மறந்துபோனதால், மேலும் இரண்டு வருடங்கள் யோசேப்பு சிறையில் இருக்க நேர்ந்தது. பிறகுதான் விடுதலை நாள் வந்தது! பார்வோனின் கனவுக்கு அவன் அர்த்தம் சொன்னதால் ஆச்சரியப்பட்ட பார்வோன், அவனைத் தனக்கு அடுத்த ஸ்தானத்திற்கு உயர்த்தினபோது யோசேப்புக்கு 30 வயது! அவனது சகோதரர்களோ, மீதியானியர்களோ, போத்திபாரோ அவன்மேல் கைபோடமுடியாதபடிக்கு பதின்மூன்று வருடங்கள் யோசேப்பைக் கர்த்தர் ஜீவனோடு வைத்து அற்புதமாகப் பாதுகாத்தார். பஞ்சக்காலத்தில் யாக்கோபையும் அவனது சந்ததியையும் காப்பாற்றுகின்ற தமது திட்டத்தைக் கர்த்தர் யோசேப்பின் மூலமாக நிறைவேற்றினார்.
அன்பானவர்களே. நாமும் நம்மைப் பயமுறுத்துகின்ற சூழ்நிலைகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை. ஏனெனில் யோசேப்பின் தேவன் நம்முடைய தேவனாயுமிருக்கிறார். அவர் நம்மைவிட்டு விலகாமல் நம்முடனிருந்து நமது எதிரிகளின் கையிலிருந்து நிச்சயம் பாதுகாத்து நடத்துவார். நமது வாழ்வைக்குறித்த நோக்கத்தை நம்மைக்கொண்டே அவர் நிறைவேற்றுவார். ஆமென்.ஜெபம்: தகப்பனே, மனுஷரோ,சூழ்நிலைகளோ எனக்கு எதிராக வரும்போது நான் பயந்துவிடாமல் உம்மீது நம்பிக்கை வைத்து உறுதியாக இருக்க கிருபைதாரும். நீ என்னைக் காத்து நடத்தி உமது திட்டத்தை என்னைக்கொண்டே நிறைவேற்றுவீர் என விசுவாசிக்க உமது கிருபையைத் தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments