வெள்ளி, அக்டோபர் 24 || எரிகோ எப்போதும் விழலாம்! எதிர்பார்த்திருங்கள்!
- Honey Drops for Every Soul

- 2 days ago
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: யாக்கோபு 1: 2-6
... ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். - யோசுவா 6:16
புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் எரிகோ கோட்டை சுவர்களைக்குறித்து பல காரியங்களைக் கண்டுபிடித்துள்ளனர். முதலாவது அதன் சுவர் ஒன்றல்ல. இரண்டு! நகரத்தைச்சுற்றிலும் இரண்டு கோட்டைச்சுவர்கள் 75 அடி இடைவெளியுடன் எழுப்பப்பட்டு, இரண்டையும் இணைக்கும் வண்ணம் உச்சியில் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. வெளிப்புறச் சுவற்றின் கனம் 6 அடி. உட்புறச்சுவற்றின் கனம் 12 அடி! உயரமோ 65 அடி! சற்று யோசித்துப்பாருங்கள். எரிகோவின் இரட்டைச்சுவர் எத்தனை வலிமை மிக்கதாயிருந்திருக்கவேண்டும்! அதை யாராலும் இடிக்கவோ பிடிக்கவோ முடியாத அளவிற்கு கட்டப்பட்டிருந்தது. இந்த நகரத்தை இஸ்ரவேலரின் கரங்களில் ஒப்புக்கொடுக்க கர்த்தர் ஒரு பிரத்தியேகத் திட்டத்தை வகுத்திருந்தார். பட்டணத்தைச் சூழ, நாளுக்கு ஒருமுறை வீதம் ஆறு நாட்களுக்கு இஸ்ரவேலரைச் சுற்றிவரச்சொன்னார் கர்த்தர். ஏழாம் நாளில் ஏழுதரம் சுற்றிவரச்சொன்னார். (யோசுவா 6:3) எல்லா நாட்களிலும் எக்காளங்கள் முழங்கவேண்டும். ஏழாம் நாளில் எக்காளங்கள் முழங்கும்போது மக்கள் மகா ஆரவாரத்தோடு ஆர்ப்பரிக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார். சற்று யோசித்துப்பார்த்தால், முதல் நாள் அனைவரும் கர்த்தரின் வார்த்தையின்படியே உற்சாகத்துடன் செய்ய ஆரம்பித்திருப்பார்கள். வலிமையான அந்த சுவர்கள் சற்றும் அசையாமல் இருந்ததைக் கண்ட அவர்களது உள்ளத்தில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்திருக்கும். ஆனால், ஏழாம் நாள் ஏழாந்தரம் ஆரவாரம் எழுந்தபோது இந்த வலிமைமிக்க சுவர்கள் அப்படியே இடிந்துவிழுந்தன! அல்லேலூயா!
நண்பர்களே, இன்று எந்தக் கோட்டை உங்களுக்கெதிரே நிற்கிறது? எத்தனை நாட்கள் காத்திருப்பது? எப்போது அவைகள் அகலும்? என்றெண்ணி நீங்கள் சோர்ந்துள்ளீர்களா? கோட்டைகளைக் காட்டிலும் கர்த்தர் பெரியவர்! நீங்களும் விடாமல் முன்னேறுங்கள். நேரம் வரும்! கோட்டையைத் தகர்ப்பார் கர்த்தர்! காரியம் கைகூடும்! ஜெபம்: தேவனே, எனக்கெதிராயிருக்கும் எரிகோ சுவர் உடைக்கமுடியாததாகத் தோன்றினாலும், என் ஜெபம் பயனற்றுத் தோன்றினாலும், நான் சோராமலிருக்க நீர் இன்று பேசினீர். உமக்கு நன்றி. வல்லமை உமது கரத்திலிருக்கிறது. ஏற்றவேளையில் எரிகோக்களை அகற்றி எனக்கு வெற்றி தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments