top of page

வியாழன், அக்டோபர் 16|| அவர் அடிச்சுவட்டைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம்.

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • 1 day ago
  • 1 min read

தெளிதேன் துளிகள் வாசிக்க: 1 பேதுரு 2: 18-25


இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும்.. நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.  - 1 பேதுரு 2:21



சீஷத்துவம் ஒரு இலகுவான பாதை அல்ல. அது நமக்காக மனமுவந்து பாடுகளைச் சகித்த கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்தொடருவது என்று விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறான் பேதுரு. இயேசு பாவமில்லாதவராக இருந்தாலும், தமக்கு இழைக்கப்பட்ட அநியாயம், அவமதிப்பு, மரணத்தையும்கூட, பழிக்குப்பழி வாங்காமல் தாங்கினார். அவருடைய வாழ்க்கை ‡ கிறிஸ்தவனின் அழைப்பு பாடுகளைத் தவிர்ப்பது அல்ல, பொறுமையுடனும், தாழ்மையுடனும் தேவன்மேல் நம்பிக்கையுடனும், அவற்றின் ஊடாக உத்தமத்துடன் கடந்து செல்வது என்பதைக் காட்டுகிறது. நமது இரட்சகர் பாடுகளை வெற்றியாக மாற்றினார். இதனால் சிலுவைப் பாதை, மகிமைக்கு நேராக நடத்துகிறது என்பதை நமக்கு அவர் கற்றுக்கொடுத்தார். 

அன்பானவர்களே, இந்த வசனம் ஒரு சவாலாக உள்ளது. அதே சமயம் ஆறுதலாக உள்ளது. இயேசுவின் அடிச்சுவடுகளை அவரது அன்பிலும், இரக்கத்திலும் மட்டும் அல்ல, பாடுகளை அவர் சகித்ததிலும் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். பர்மாவில் பல வருடங்கள் மிஷனரிப் பணிசெய்த அதோனிராம் ஜட்சன் போன்ற பல மிஷனரிகள் இந்த அழைப்புக்கு ஏற்றவாறு வாழ்ந்தனர். வியாதி, சிறைவாசம், தனக்கருமையானவர்களின் மரணம் இவற்றின் மத்தியிலும் சுவிசேஷம் அறிவிப்பதை ஜட்சன்  புறக்கணிக்கவில்லை. அவரது விடாமுயற்சி நமக்கு, இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவது என்பது, நமக்கு இழைக்கப்படும் தவற்றுக்கு தயவுடன் பதிலளிப்பது, நம் வாழ்க்கையை தேவனது பொறுப்பில் விட்டுவிடுவது, பாடுகளிலும்கூட கிறிஸ்துவின் குணாதிசயத்தை வெளிப்படுத்துவது என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. எபிரெயர் 12:3, நீங்கள் இளைப்புள்ளவர்களாய், உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட  இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறது. தேவபிள்ளையே, தைரியமாக இரு; உன் பாடுகள் வீணாய்ப் போகாது. கிறிஸ்து உனக்கு முன்பே இந்தப் பாதையில் நடந்துச் சென்றிருக்கிறார். இப்போதும் உன்னுடன் அவர் நடக்கிறார். அவர் பிரசன்னம் நமக்கு பெலத்தையும், அவர் வாக்குத்தத்தங்கள் நமக்கு நம்பிக்கையையும் தருகின்றன. அவர் அடைந்த வெற்றி, ஒரு நாள் உன் கண்ணீரெல்லாம் துடைக்கப்படும் என்ற உறுதியை நமக்குக் கொடுக்கிறது.


ஜெபம்: அன்பின் ஆண்டவர் இயேசுவே, சகிப்புத்தன்மை, விசுவாசம் என்பவற்றிற்கு மாதிரியை எங்களுக்கு வைத்துப்போனதால் உமக்கு நன்றி. அன்பிலும், இரக்கத்திலும் மட்டுமல்ல, பாடுகளிலும் உம் அடிச்சுவட்டை பின்தொடர எனக்கு உதவும். உலகமெங்கும் உம் நாமத்துக்காக மிஷனரி பணித்தளங்களில் பாடுபடுபவர்களைப் பெலப்படுத்துவீராக.  ஆமென்.  

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page