புதன், அக்டோபர் 29 || பெருமையுள்ளவர்கள் ஆசீர்வாதம் பெறமுடியாது!
- Honey Drops for Every Soul

- Oct 29
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: 2 இராஜாக்கள் 5: 1-15
மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்...
- நீதிமொழிகள் 16:5
நாகமான் சீரியநாட்டுப் படைகளின் படைத்தளபதி. அவன் முக்கியமானவன்; மிகவும் தைரியசாலி; நாட்டுப்பற்று மிக்கவன்; மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவன். ஆனால் அவனுக்கு குஷ்டரோகம் என்னும் கொடிய நோய் இருந்தது. அவனது மனைவியிடம் வேலைசெய்த அடிமைச் சிறுமி, இஸ்ரவேலில் தீர்க்கதரிசியாக இருந்த எலிசாவிடம் தன் எஜமான் சென்றால் சுகம் கிடைக்கும் என்று யோசனை கூறினாள். குஷ்டரோகத்திலிருந்து எப்படியாவது தனக்கு சுகம் கிடைத்தால் போதும் என்ற நிலையிலிருந்த நாகமான் நிறைய பொன் வெள்ளியை எடுத்துக்கொண்டு, தனது இரதத்தில் ஏறி, பரிவாரம் சூழ எலிசாவின் வீட்டு வாயிலுக்கு வந்தான். எலிசாவோ தன் வேலைக்காரனை அவனிடம் அனுப்பி, யோர்தான் நதியில் ஏழுதரம் முழுகி எழச்சொன்னான். அதனால் ஏமாற்றமும் கோபமும் அடைந்த நாகமான், இந்த யோர்தானைக் காட்டிலும் நல்ல நதிகள் என் தேசத்திலேயே உண்டு. இந்த யோர்தானில் நான் ஏன் ஸ்நானம் பண்ணவேண்டும் என்று கூறி, திரும்பிச்செல்ல எத்தனித்தான். ஆனால் அவனது ஊழியக்காரர் அவனிடம் நயமாகப் பேசி அவனைச் சம்மதிக்க வைத்தனர். நாகமான் யோர்தானில் தீர்க்கதரிசியின் சொற்படி முழுகி எழுந்தபோது தன் தோலைப் பார்த்தான். ஒரு மாற்றமும் இல்லை. வெளியே வந்துவிடலாம் என்று அவனுக்குத் தோன்றிற்று, ஆனாலும் இன்னுமொரு முறை முயற்சித்தான். ஏழு முறை முழுகி எழுந்தபோது அவனது தோல் ஒரு சிறுகுழந்தையின் தோல்போல புதிதாக மாறினதைக் கண்டான். ஆச்சரியத்துடன் அவன் வெளியே வந்தான்! (2 இராஜாக்கள் 5:14)
அன்பானவர்களே, உங்களது வாழ்க்கையிலும் அதிக நாட்களாகக் கண்ணீருடன் ஜெபித்தும் இன்னமும் அற்புதத்தை அடையாமல் இருக்கலாம். ஒருவேளை உங்களில் உள்ள பெருமை சாகவேண்டும் என்று கர்த்தர் விரும்பலாம்! உரிடமிருந்து வரவேண்டிய அற்புதத்தை, ஆசீர்வாதத்தைத் தடைசெய்துகொண்டிருக்கலாம். நீங்கள் உங்களைத் தாழ்த்தி, அவரை முழுவதும் நம்பவேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். அவரிடம் வாருங்கள். உங்கள் பெருமையை அவரிடம் அறிக்கை செய்யுங்கள். உங்களுக்காக அவர் வைத்துள்ள ஆசீர்வாதத்தைப் பெற்று அனுபவியுங்கள்!ஜெபம்: தேவனே, நாகமான் தன் இரதத்தைவிட்டு இறங்கி, பெருமையை முற்றிலும் அப்புறப்படுத்தி, தாழ்மையுடன் யோர்தானில் இறங்கியபின்னரே நீர் அற்புதம் செய்தீர். என் பெருமை நான் பெறவேண்டிய அற்புதத்தைத் தடைசெய்யாதபடி என்னைத் தாழ்த்துகிறேன். ஆசீர்வதியும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments