திங்கள், அக்டோபர் 27 || எதிரியைத் துரத்தி முறியடியுங்கள்!
- Honey Drops for Every Soul

- Oct 27
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: யோசுவா 10: 9-26
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். - எபேசியர் 6:11
எமோரியரின் ராஜாக்கள் ஐவர் ஒருமுறை கிபியோனியரை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டுவந்தனர். தங்களுக்கு உதவ வரும்படி கிபியோனியர் யோசுவாவிற்கு செய்தி அனுப்பினர். உடனே, யோசுவா, இரவெல்லாம் தன் சேனையை நடத்தி எதிரிகள் எதிர்பாராத நேரத்தில் அவர்கள்மேல் வந்துவிட்டான். கர்த்தர், கல்மழையை அனுப்பி எதிரிகளைச் சங்காரம்பண்ணி இஸ்ரவேலருக்கு உதவினார்; யோசுவா அத்துடன் விடவில்லை. எதிரிகளைப் பின்தொடர்ந்து அடியோடு அழிக்க அவன் எண்ணினான். ஆனால், தன்னுடைய சேனைவீரர்கள் களைத்திருக்கிறார்கள் என்றும், செய்துமுடிக்கவேண்டிய காரியம் மிகப்பெரிது என்றும் கண்ட அவன், கர்த்தரிடம் வேண்டுதல் செய்தான். அவர் அற்புதமாக இடைபட்டு, முற்றிலும் எதிரிகளை மேற்கொள்ளும்வரை கிபியோனின்மேல் சூரியனையும் ஆயலோனின்மேல் சந்திரனையும் தரித்து நிற்கச்செய்து பகலை நீட்டித்தார். (யோசுவா 10:13) அதைக்கண்ட யோசுவா, தன் படையை நோக்கி, நீங்கள் நில்லாமல் உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்கள் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்க ஒட்டாதிருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான். (யோசுவா 10:19) அன்று இஸ்ரவேலர் பெரிய வெற்றியைப் பெற்றார்கள். எமோரியரின் ராஜாக்கள் ஐவரும் ஒரு கெபியில் ஒளிந்திருக்கிறார்கள் என்று அறிந்த யோசுவா அவர்களை வெளியே கொண்டுவரச்சொல்லி அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களில் அவர்களது சரீரங்களைத் தூக்கிப்போட்டான். இப்படி கர்த்தரின் வார்த்தையின்படியே அவன் எதிரிகள் ஒருவரையும் உயிரோடே வைக்காமல் அனைவரையும் சங்காரம்பண்ணினான். தப்பினவர்கள் ஒருவராகிலும் இல்லை!
அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய வாழ்விலும், நம் எதிரியான சாத்தான் நம்மை எதிர்த்துவரும்போது நாம் அவனுக்குப் பயப்படாமல் ஆவியான தேவன் நமக்குத் துணைசெய்கிறார் என்றறிந்து விடாமுயற்சியுடன் அவனைத் தொடர்ந்து விரட்டியடித்து முற்றிலும் ஜெயங்கொள்வோம். ஜெபம்: தேவனே, எதிரியான சாத்தான் என்னை குறிவைத்துத் தாக்க முயற்சிப்பதை அறிந்திருக்கிறேன். அவனுக்குப் பயந்து நான் பின்வாங்காமல் நீர் எனக்குத் துணை செய்கிறீர் என்பதை உணர்ந்து, சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துநின்று அவனை முறியடித்து வெற்றிபெறக் கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments