சனி, அக்டோபர் 25 || விசுவாசம்தான் விடாப்பிடியாய் நிற்க பெலன் தரும்!
- Honey Drops for Every Soul

- 1 day ago
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: 1 இராஜாக்கள் 18: 41-46
... நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
- எபிரெயர் 12:1
எலியாவின் வார்த்தையின்படியே தேசத்தின்மேல் மூன்றரை வருடங்கள் மழைபெய்யவில்லை. தேசமெங்கும் சரித்திரம் காணாத கொடிய பஞ்சம் நிலவியது. ஆயினும், தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால் (1 இராஜாக்கள்18:1), தான் சொன்னபடியே அவர் செய்வார்; அவரது வாக்கு மாறுவதில்லை என்று எலியா விசுவாசித்தான். எனவே, சூழ்நிலையைப் பார்க்காமல் முதலாவது, கர்மேல் பர்வதத்தின்மேல் ஏறி, தரைமட்டும் குனிந்து, தன் தலையை முழங்கால்வரை கொண்டுவந்து, ஊக்கத்துடன் ஜெபித்தான். (1 இராஜாக்கள் 18:42) தன் வேலைக்காரனை அனுப்பி சமுத்திரத்தை நோக்கிப்பார்க்கச் சொன்னான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை மழைக்கான அறிகுறி ஒன்றும் புலப்படவில்லை என அவன் திரும்பி வந்து அறிவித்தபோதும் எலியா சோர்ந்துபோகாமல், தன் ஜெபத்தை விடாமல் தொடர்ந்து ஜெபித்து, இன்னும் ஆறுமுறை அவனை அனுப்பி, பார்க்கும்படி சொன்னான். அப்போதும்கூட, ஒன்றும் தெரியவில்லை என்ற பதில் கிடைத்தபோதிலும், எலியா ஜெபிப்பதை நிறுத்தவில்லை. ஏழாவது முறை அந்த வேலைக்காரன் சென்று பார்த்தபோது, சமுத்திரத்திலிருந்து உள்ளங்கையளவு சிறிய மேகம் எழும்பியதைக் கண்டான், சில நிமிடங்களில் அது கறுத்து, பெருமழை உண்டானது! கர்த்தருடைய அற்புதம் விளங்கியது!
அன்பானவர்களே, எதற்காகவாவது காத்திருக்கிறீர்களா நீங்கள்? வியாதியிலிருந்து சுகத்தை எதிர்நோக்கியிருக்கிறீர்களா? உடைந்துபோன உறவுகள் என்று மீண்டும் ஒட்டும் என்று காத்திருக்கிறீர்களா? உங்களது பொருளாதாரத் தொய்விலிருந்து எப்போது விடுதலை கிட்டும் என்றிருக்கிறீர்களா? அல்லது உங்களுக்கு அருமையானவர்கள் இரட்சிக்கப்படுவது எப்போது என்று ஏங்கிக்கொண்டிருக்கிறீர்களா? ஒருவேளை ஆறு வாரங்கள், அல்லது ஆறு மாதங்கள் ஏன் ஆறு வருடங்களாக நீங்கள் காத்திருக்கலாம். ஆனாலும் உங்கள் ஜெபம் கேட்கப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் நீங்கள் காணாதிருக்கலாம். இன்று எலியாவின் அனுபவம் உங்கள் அனுபவமாகட்டும். விசுவாசத்துடன் ஜெபத்தில் தரித்திருங்கள். கர்த்தரின் வாக்குத்தத்தங்களை நம்பிக் காத்திருங்கள். நிச்சயம் ஆசீர்வாதம் மழையாகப் பெய்யும். ஜெபம்: தேவனே, எனக்கு ஜெபத்தில் நிலையாகத் தரித்திருக்கக்கூடிய கிருபையைத் தருவீராக. நான் பார்க்கும் காரியங்கள் பிரதிகூலமாகத் தெரிந்தாலும், நீர் வாக்குப்பண்ணினதை இன்றேகூட நிறைவேற்ற வல்லவராயிருக்கிறீர் என விசுவாசித்து, காத்திருக்க உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments