top of page

வெள்ளி, ஜூலை 11 || ஏன் தம் மக்களுக்கு துன்பத்தை கொண்டுவருகிறார் தேவன்?

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jul 11
  • 1 min read

வாசிக்க: 1 பேதுரு 1: 3-7


இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்பட வேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். - 1 பேதுரு 1:6


தேவன் நம்மைச் சோதிக்கும்போது, நம்மைச் சூளையில் போடுகிறார். நம்மை அழிப்பதற்கோ, காயப்படுத்துவதற்கோ, அல்லது தீங்குசெய்வதற்கோ அவர் அப்படிச் செய்வதில்லை. ஆனால், அவர் நம்மைச் சுத்தப்பொன்னாக்கவே விரும்புகிறார்; அதற்காகத்தான் அப்படிச் செய்கிறார். அதுதான் கிறிஸ்தவக் குணத்தை நமக்குள் வளர்க்கிறது. சோதிக்கப்படும்போதுதான், களிம்புகள் நீக்கப்பட்டு, தங்கமானது சுத்தப் பொன்னாகிறது. இதுவே தேவன் பயன்படுத்துகிற முறை, அவரது பள்ளியில் அவர் தருகின்ற பயிற்சி. தேவன் இங்கே திட்டமிட்டு செய்கிற யாவும், பரலோகில் அவர் நமக்காக சேர்த்து வைத்தவைகளுக்கு நம்மை ஆயத்தப்படுத்துவதற்காகவே! பரலோகில் நமக்கு என்ன வைக்கப்பட்டுள்ளது என்பது யாருக்கும் இப்போது தெரியாது. ஆனால் இங்கே நாம் வாழும் வாழ்க்கையானது, நம் எதிர்கால நித்தியத்துக்காக தேவன் நம்மைப் பயிற்றுவிக்கிற பள்ளியாகும். நம் வாழ்விலே ஏன் சோதனைகள் வருகின்றன என்பதை இது தெளிவாக்குகிறது. நாம் கிறிஸ்தவ அனுபவங்களை பெறுவதற்கு இவை தேவனுடைய பள்ளியில் கருவியாகப் பயன்படுகின்றன. 


சோதனைகள் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காக நம்மைத் தயார்படுத்துகின்றன; மற்றும், பாவம் செய்யாதபடி நம்மைத் தடுப்பதற்கும் உதவுகின்றன. நம்முடைய பாவங்கள், நம்முடைய சோம்பல், ஆடம்பரம், பெருமை, உலக ஆசை இவைகளை நீக்குவதற்காகத் துன்பங்களை அனுமதிக்கிறார் தேவன். கண்கள் மென்மையான அவயவமாய் இருந்தாலும், அவற்றில் தொற்று ஏற்பட்டால் நோயைக் குணமாக்க சில வலிமைமிக்க மருந்துகளைக் கண்களில் இடுகிறோம் அல்லவா! அப்படித்தான், அவருடைய கண்மணிபோலத் தேவனுக்கு நாம் இருந்தாலும் -  நம்மில் பாவம் வளரத் தொடங்கும்போது, துன்பம் என்னும் வலிமையான மருந்தைச் செலுத்தி, பாவ வியாதியை நீக்குகிறார். அன்பர்களே, இன்று தேவன் நம்மை வளைத்து வடிவமைத்து மெருகூட்டும்போது, நமக்குள் இருக்கும் மனப்பான்மை என்ன? நாம் முறுமுறுக்கிறோமா? புலம்புகிறோமா? அவரது கிரியையை குற்றம் சொல்லுகிறோமா? நாம் வருந்தவேண்டாம். ஒவ்வொரு சிலுவையும் தேவனுடைய செய்தியே; இறுதியில் அவை நமக்கு நன்மையையே தரும் என்கிறார் ஜே சி ரைல். நமக்கு எதிராய் பிரச்சனைகள் வந்தாலும் அவை நம்மை விழுங்காதபடிக்கு நமக்காக அளவுக்கதிகமான தேவ கிருபை இருக்கிறது!  

ஜெபம்:  ஆண்டவரே, சோதனைகள் அவசியமானவை, தவிர்க்கமுடியாதவை என நான் அறிந்தேன். அவற்றுக்கு தெய்வீக நோக்கமுண்டு; என்னை அழிக்க அல்ல, என்னைப் புடமிடவே அவை வருகின்றன. ஆகவே, துன்பத்திலே நான் சோர்வடையாதபடி நீர் எனக்கு அதிக கிருபை தருவீர் என நம்புவேன். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page