வெள்ளி, ஜூன் 27 || பொறாமைக்குப் பலியாகவேண்டாம்!
- Honey Drops for Every Soul

- Jun 27
- 1 min read
வாசிக்க: 1 சாமுவேல் 16:21,22; 18:6-11
பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே. - நீதிமொழிகள் 24:1
கீழ்ப்படியாமை, அவிசுவாசம், பொறுமையின்மை, பொய்யுரைத்தல் போன்ற பாவங்களோடு சவுலின் இருதயம் வெறுப்பு மற்றும் பொறாமையினாலும் நிறைந்திருந்தது. தாவீது கோலியாத்தைக் கொன்றபிறகு, சவுலுடன் தாவீது திரும்பிவருகையில், சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாக ஸ்திரீகள் பாடினதைக் கேட்டதுமுதல் சவுல் அவனை வெகுவாகப் பகைத்தான். அப்படி அந்த ஸ்திரீகள் பாடியது தாவீதை எந்தவிதத்திலும் பெருமைகொள்ளச் செய்யாதிருந்தபோதிலும், சவுலையோ பொறாமையினால் நிறையச் செய்தது. இதனால் அவன் தாவீதை காய்மாகாரமாய்ப் பார்க்கத்தொடங்கினான். வாரன் வியர்ஸ்பீ, பொறாமை மிகவும் ஆபத்தானது; அது புற்றுநோயைப்போல ஒரு மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவிடும் தன்மையுடையது. மேலும், நமது சொற்களையும் செயல்களையும் கொடுமையானதாக மாற்றிவிடும் வல்லமை அதற்கு உண்டு என்று எழுதுகிறார். சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி என்று நீதிமொழிகள் 14:30 கூறுகிறது. நமக்குரியது என நாம் நினைக்கும் கனமும் புகழும் மற்றவர்களுக்கு உரியதாகும்போது நமக்குள் ஏற்படும் வேதனையே பொறாமையாக வெளிப்படுகிறது. என்னை முக்கியப்படுத்துங்கள் என்று நம்மில் அநேகர் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்று பாப் குக் என்பவர் எழுதுகிறார். இது எத்தனை உண்மை! பொறாமை ஒரு மனிதனைக் கொலைசெய்யவும் தூண்டிவிடுகிறது. சவுலும் தாவீதைத் தன் ஈட்டியை ஓங்கி கொலைசெய்ய முயன்றதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஆனாலும் தாவீதைக் கர்த்தர் காத்துக்கொண்டார்.
அன்பானவர்களே, இயற்கையிலேயே நம் அனைவருக்கும் ஒருவிதப் பெருமையுணர்வு இருக்கிறது. எனவேதான் மற்றவர்கள் நம்மைப் பாராட்டவேண்டும், மதிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். எனவே, மற்றவர்கள் உயர்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆனால் இந்தப் பொறாமையானது ஆவிக்குரிய விதத்திலும் சரீரப்பிரகாரமாகவும் அதிகம் பாதித்துவிடுகிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. யாக்கோபு 3:16, வைராக்கியம் சகல துர்ச்செய்கைகளுக்கு நேராக நம்மை நடத்தும் என எச்சரிக்கிறது. எனவே, தேவபிள்ளைகளாகிய நாம் பொறாமையை நம்மைவிட்டு விலக்கி, இயேசுவின் அன்பினால் நிரம்புவோம்.ஜெபம்: கர்த்தாவே, எனது நண்பனோ அல்லது உடன்வேலை செய்பவரோ வெற்றிப் படிகளில் ஏறுவதைக் காணும்போது, எனக்கு வரவேண்டிய கனம் அவர்களுக்குக் கொடுக்கப்படும்போது பொறாமைப்படாமல், அவர்களையும் இயேசுவின் அன்புடன் நேசிக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments