வெள்ளி, ஜூன் 20 || கட்டுவோம்! காப்போம்!!
- Honey Drops for Every Soul

- Jun 20
- 1 min read
வாசிக்க: நெகேமியா 4: 6-23
கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்;... - நெகேமியா 4:18
நெகேமியா எருசலேமின் அலங்கத்தைக் கட்டத் தொடங்கியபோது, எதிரிகள் அந்த வேலையைத் தடைசெய்ய எத்தனித்தனர். இதைக் கேட்ட யூதர்கள் பயத்தினால் சோர்ந்துபோனார்கள். ஆனால், நெகேமியாவோ, சற்றும் கலங்காமல் வேலையைத் தொடர்ந்தான். முதலாவது, அவன் தன் கர்த்தரிடம் ஜெபித்தான். மேலும், அலங்கத்தின் முக்கிய இடங்களிலும் எதிரிகள் காணும்படியாக சில காவற்காரரை நிறுத்தி, தாங்கள் எப்போதும் எதிர்த்துப்போரிடத் தயார் என்பதை எதிரிகளுக்கு உணர்த்தினான். இரண்டாவதாக, அலங்கத்துக்குப் பின்னாக பட்டயம், ஈட்டி, வில்லைப் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பம் குடும்பமாக நிறுத்தினான். மூன்றாவதாக, அருமையாக திட்டம் தீட்டி, சரிபாதி மக்கள் வேலை செய்யவும், மறுபாதி ஆயுதங்களுடன் காவல் காக்கவும் பணித்தான். வேலை செய்தவர்களும் ஒரு கையினால் வேலை செய்து மறுகையினால் பட்டயம் பிடித்திருந்தனர். அலங்கத்தில் வேலை செய்தவர்கள் பட்டயத்தை இடுப்பிலே கட்டியிருந்தார்கள். அதுமட்டுமின்றி எதிரி கிட்டி வந்தால் எச்சரிப்பதற்கு எக்காளம் ஊதுபவனையும் நிறுத்தினான். எல்லாவற்றிற்கும் மேலாக, பயப்படாமல் கர்த்தரின் உறுதியை நாடி செயல்படும்படி மக்களை உற்சாகப்படுத்தினான். இப்படிப்பட்ட தேர்ச்சியான திட்டம் மற்றும் செயல்பாட்டினால் அந்த அலங்கம் ஐம்பத்தி இரண்டே நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டது.
அன்பானவர்களே, நாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்யத்தொடங்கும்போது, சத்துரு விழித்துக்கொண்டு நமக்கு எல்லாவகையிலும் தடைகளையும் துன்பங்களையும் வருவிக்கிறான். நமது வேலையைத் தடைசெய்ய தன்னாலானவற்றைச் செய்கிறான். ஆனால் அதைக்கண்டு நாம் பின்வாங்கிவிடக்கூடாது. கட்டுவதும் காத்துக்கொள்வதும் ஒரு உண்மையான சீஷனுடைய வாழ்வில் அனுதினமும் நடைபெறும் நிகழ்ச்சிகளாக இருக்கவேண்டும் என வாரன் வியர்ஸ்பீ கூறுகிறார். எனவே, நாம் விழித்திருந்து, நம்மையும் காத்துக்கொண்டு, ஆண்டவரது பணியை எதிர்ப்பின் மத்தியிலும் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்.ஜெபம்: பிதாவே, உமக்கு நான் செய்யும் வேலையைப் பிசாசு தடுத்து என்னையும் தாக்கமுற்படும்போது, நான் பயந்து விலகிவிடாமல், உமது சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொண்டு என்னைக் காத்துக்கொள்ள கிருபை தாரும். உம் வேலையைத் தடையில்லாமல் செய்யவும் உதவிபுரியும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments