top of page

வெள்ளி, ஜூன் 06 || சிறுபிள்ளை போன்ற மனப்பான்மை நமக்குத் தேவை

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 6
  • 1 min read

வாசிக்க:  மத்தேயு 18: 1-4


... சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். - மத்தேயு 18:1

இந்த நிகழ்ச்சிக்கு முன் நடந்த சம்பவங்களே சீஷர்கள் இயேசுவிடம் இந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டியிருக்க வேண்டும். தனக்கும் பேதுருவுக்கும் ஆலய வரி செலுத்த அவர் அதிசயவிதமாக பணத்தைக் கொண்டுவர உதவினார். சீஷர்களால் குணமாக்கமுடியாத பிசாசு பிடித்த இளைஞனை சொஸ்தமாக்கினார். (மத்தேயு 17: 14-21) மேலும், சற்று முன்புதான் பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரும், மோசே, எலியாவையும், மறுரூபமடைந்த இயேசுவையும் கண்ட அந்த மலையிலிருந்து கீழே இறங்கிவந்தனர். இவை அனைத்தையும் கண்ட அவர்கள், இயேசுதான் மேசியா, ராஜா என்று  உணர்ந்து, அவரது ராஜ்யத்தில் தங்களுக்கு உயர்ந்த இடம் கிடைக்கும் என்று எண்ணத் தொடங்கினார்கள். இயேசு சீஷர்களுடைய கேள்விக்கு வெறும் வார்த்தையால் பதிலளிக்காமல், தாம் போதிக்க விரும்பினதை செயலின் மூலம் தெளிவாக்கினார். ஒரு பிள்ளையைத் தம்மிடம் வரவழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தினார். உண்மையான தாழ்மையும், குழந்தை போன்ற நம்பிக்கையும், எளிமையும் இல்லாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கமுடியாது என்று உறுதியாய்ச் சொன்னார்.  

அன்பானவர்களே, பெரியவர்களாக ஆகவேண்டும் என்று ஜனங்கள் வாஞ்சிப்பதற்குக் காரணம் உயர்ந்தவர்கள்தான் மற்றவர்கள் கண்களுக்கு முன் கனம்பெற்றவர்களாயிருப்பார்கள் என்ற அவர்களது தவறான நம்பிக்கையே! இந்த உயர்வு அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும், அவர்களின் ஆத்துமாக்களை திருப்தியாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தங்களையே உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளுகிறார்கள்; அவர்களுடைய சொந்த பெலனையும் ஞானத்தையும் சார்ந்துகொள்கிறார்கள். ஆனால், ஆண்டவரின் மதிப்பீட்டில் உண்மையான உயர்வு வேறுவிதமாயிருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தில் நுழைய விரும்புபவர்களுக்கு இத்தகைய மனப்பான்மை இருக்கக்கூடாது என்று இயேசு கூறுகிறார். கற்பனையான பெருமையில் இருந்து கீழிறங்கி, மெய்யாகவே தாழ்மையுள்ள மனதுடனிருந்து, சிறு பிள்ளைகளைப்போல் இருந்தால்தான் நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமுடியும். கிருபையில் பெருகவேண்டும் என்றால், சிறு பிள்ளைகளைப்போலவே நாமும் தாழ்மையும், எளிமையும், நம்பிக்கையும் உடையவர்களாய் மாறவேண்டும் என்று ஸ்பர்ஜன் எழுதுகிறார்.

ஜெபம்: ஆண்டவரே,  சிறுபிள்ளை போன்ற எளிமை, தாழ்மை, உம்மேலுள்ள நம்பிக்கை என்னிலும் வரவேண்டும். கற்பனையான உயர்வுக்கு நேராய் நான் ஓடக்கூடாது. பெருமையும் அகந்தையுமாய் நான் இராமல், தாழ்மையுடன் இருக்க உதவும், அதுவே உம் பார்வையில் மதிப்பிடத்தக்கது. தாழ்மைக்கும் கனத்துக்கும் உரிய உம்மையே நான் எனக்கு மாதிரியாகக் கொள்வேன். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page