top of page

வெள்ளி, செப்டம்பர் 26 || யோசேப்பின் வியத்தகு விசுவாசம்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Sep 26
  • 1 min read

தெளிதேன் துளிகள் வாசிக்க: ஆதியாகமம் 15: 12-16, 50: 24-26


விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றி.. பேசி... - எபிரெயர் 11:22


யோசேப்பு பதினேழு வயதாயிருக்கையில் எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டு (ஆதியாகமம் 37:2), அங்கே 93 ஆண்டுகள் வாழ்ந்து, தன் 110வது வயதில் மரித்தான். (ஆதியாகமம் 50:26) அந்த தேசத்தில் அவன் பலமுறை தனிமையில் வாடி, அநியாயத்தைச் சகித்து, புறக்கணிப்பையும் சந்தித்தான். விசுவாச வர்த்தனைக்கு சாதகமான சூழ்நிலை அவனது வாழ்வில் இல்லாதிருந்தது. எகிப்திலும் வேறு தெய்வங்களைத் தொழுதுகொண்டிருந்த மக்களின் மத்தியில் அவன் வாழ்ந்தான். அவனை உற்சாகப்படுத்தவோ, விசுவாசப் பாதையில் நடத்தவோ ஆவிக்குரிய தலைவர்கள் ஒருவரும் அங்கு இல்லை. அவனால் உதவிபெற்றவர்களும் தேவையான நேரத்தில் அவனுக்கு உதவ மறந்துபோனார்கள். விசுவாசத்தை மறுதலிக்க, விட்டுவிட யோசேப்புக்குப் போதுமான காரணங்கள் இருந்தன. ஆனால், அவனது விசுவாசம் ஒருநாளும் ஆழமற்ற விசுவாசமாக இருக்கவில்லை. இத்தனை சூழ்நிலைகளையும் வெற்றியுடன் கடந்துவந்தது மட்டுமல்ல, தன் அந்திய காலத்தில் தன் சகோதரர்களிடத்தில் அவன், நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார். என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்று சொன்னான். 


அன்பானவர்களே, நம் விசுவாசம் யோசேப்பினுடைய விசுவாசத்துக்கு ஒத்திருக்கிறதா அல்லது ஆழமற்ற விசுவாசமாக இருக்கிறதா? நமது உணர்வுகளையோ, சூழ்நிலைகளையோ  சார்ந்திருப்பதல்ல மெய் விசுவாசம்; அவைகள் எத்தனைதான் மோசமானவைகளாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தையைச் சார்ந்திருப்பதே மெய்யான விசுவாசம். எபிரெயர் 11:1 சொல்லுகிறபடி, விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. 

ஜெபம்: கர்த்தாவே, தன் விசுவாசத்தை அசைக்கக்கூடிய சூழ்நிலைகள் இருந்தபோதும் விசுவாசத்தில் உறுதியாயிருந்த யோசேப்பைப்போல நானும் என் சூழ்நிலைகள் எப்படியிருப்பினும் உமது வாக்குத்தத்தங்களை மட்டும் முழுமையாக நம்பி, என் விசுவாசத்தில் உறுதியாயிருக்க உமது கிருபையைத் தாரும். ஆமென்

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page