வெள்ளி, செப்டம்பர் 19 || நம் நேசம் கர்த்தருக்கு வேண்டும்!
- Honey Drops for Every Soul
- Sep 19
- 1 min read
வாசிக்க: மாற்கு 12: 28-31
... இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?
- யோவான் 21:15
கர்த்தர் ஆதாமையும் ஏவாளையும் உருவாக்கினபோது, அவர்களுக்குத் தேவையான யாவற்றையும் படைத்து அவர்களது கரங்களில் கொடுத்தார். ஏதேன் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தின் கனியைத் தவிர மற்ற எல்லா மரங்களின் கனிகளையும் அவர்களுக்குப் புசிக்கக்கொடுத்தார். அவர்களது தேவைக்கு மிஞ்சியே அவர் கொடுத்திருந்தார். இன்றும் அவர் நம் எல்லாத் தேவைகளையும் சந்திக்கிறவராக இருப்பது மட்டுமின்றி, நமது பாவங்களை நமக்கு மன்னித்து, நம் மேல் அளவுகடந்த அன்பைச் சொரிகிறார். அதுமட்டுமா? எண்ணிலடங்கா நன்மைகளை நமக்குத் தருவதோடு இன்னமும் தருவதாக ஏராளமான வாக்குத்தத்தங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். எனவேதான், ரோமர் 8:28, எந்த சூழ்நிலையிலும் நாம் கவலைப்படத் தேவையில்லை, சகலமும் நம் நன்மைக்கென்றே அவர் அனுமதிக்கிறார் என்று கூறுகிறது. அதற்காக, ஒரு கிறிஸ்தவனது வாழ்வில் கடினமான சூழ்நிலைகளே வராது என்று அர்த்தமாகாது. ஆனால், நம்மை அழித்துப்போடுவதற்கான எந்த சூழ்நிலையையும் கர்த்தர் அனுமதிக்கமாட்டார். நம் நன்மைக்கென்றே எல்லாவற்றையும் அவர் அனுமதிப்பார். இப்படி எல்லாவற்றையும் நமக்காகச் செய்யும் கர்த்தர் அதற்குப்பதிலாக நம்மிடம் ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறார். நாம் அவரை முழுமனதுடன் நேசிக்கவேண்டும் என்பதைத் தவிர வேறெதையும் அவர் கேட்பதில்லை. அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமாகத்தான் அவரை நேசிக்கிறோம் என்று நம்மால் காட்டமுடியும். இதைச் செய்யத்தான் அன்று ஆதாமும் ஏவாளும் தவறிப்போனார்கள்.
அன்பானவர்களே, நாம் பெற்ற எல்லா நன்மைகளை நினைத்து அவருக்கு நன்றியைக் காட்டுவோம். அவரை நேசிக்கிறோம் என்று நம் வாயால் சொல்வதைக்காட்டிலும், அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு செயலால் காண்பிப்போம்.
ஜெபம்: தேவனே, நான் நினைத்தும் பார்க்காத நன்மையான பலவற்றையும் எனக்குக் கொடுத்திருக்கிறீர். என்னை இரட்சித்தீர். ஆவியின் அபிஷேகம் தந்தீர். வீடு மனைவி பிள்ளைகள் தந்தீர். தேவைகளை சந்தித்தீர். இவற்றுக்காக நன்றியுடன் உம்மை நேசிக்க எனக்கு உமது கிருபையைத் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments