வெள்ளி, ஏப்ரல் 25 || பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருங்கள்!
- Honey Drops for Every Soul
- Apr 25
- 1 min read
வாசிக்க: அப்போஸ்தலர் 2: 1-4, 38,39
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து ... பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். - அப்போஸ்தலர் 1:8
வேதத்தில் புறாவுக்கு ஒப்பிடப்பட்டிருக்கும் ஆவியானவர் ஆள்தத்துவமுடையவர். வல்லமையாக செயலாற்றுபவர்; சிருஷ்டிப்பில் பங்கேற்றவர். ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தபோது, தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். (ஆதியாகமம் 1:1,2) தமக்கென்று கர்த்தர் ஊழியர்களைத் தெரிந்துகொண்டபோது அவர்கள்மேல் ஆவியானவர் இறங்கினார். யாத்திராகமம் 35:30-33ல், ஆசரிப்புக்கூடாரத்தை நிர்மாணிக்க கர்த்தர் தெரிந்துகொண்ட பெசலெயேலின் மீது ஆவியானவர் இறங்கி, அவனை ஞானத்தினாலும், புத்தியினாலும், அறிவினாலும் நிரப்பி சகலவித வேலைகளைச் செய்ய அவனைத் திறமையுள்ளவனாக்கினார். ஒத்னியேல் எனும் தலைவனைக்குறித்து நியாயாதிபதிகள் 3:9,10ல், நாம் வாசிக்கிறோம். கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினபடியால் அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தது மட்டுமல்லாமல் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவை முறியடித்து நாற்பது வருடம் தேசத்தை சமாதானத்துடன் நடத்தினான். அதற்குப்பிறகு, தேவ ஆவியானவர் தீர்க்கதரிசிகளின்மேல் இருந்ததையும், கர்த்தரின் வார்த்தையினால் அவர்கள் இஸ்ரவேலை எச்சரித்து நடத்திய விதங்களையும் வேதம் தெளிவாகக் கூறுகிறது.
புதிய ஏற்பாட்டில், ஆண்டவர் இயேசுவின் பிறப்பே பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நிகழ்ந்தது என்று அறிகிறோம். பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும் என தேவதூதன் மரியாளுக்கு அறிவித்ததை நாம் லூக்கா 1: 35ல் வாசிக்கலாம். ஆண்டவராகிய இயேசுவின் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கிவந்தார். அவரது வல்லமையினால் நிரம்பியவராகத்தான் இயேசு இப்பூமியிலே வாழ்ந்த நாட்களில் வல்லமையான ஊழியம் செய்தார். அவர் பரமேறியபின், ஆவியானவர் அவரது சீஷர்களின்மேல் ஊற்றப்பட்டார். இந்த ஆவியானவர் - வல்லமையின் ஆவியானவர், ஞானத்தின் ஆவியானவர், அன்பின் ஆவியானவர். இவர் நமக்குள்ளும் நம்மோடும் இருக்கிறார். அவர் நம்மை நிரப்ப இடம் கொடுப்போம். அவர் நம்மை நடத்துவார்.
ஜெபம்: தேவனே, தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரால் என்னையும் அபிஷேகித்தீரே, நன்றி! அவர் என்னை அனுதினமும் போதித்து வழிகாட்டுகிறார். அவரது வல்லமையை நான் உணரச் செய்கிறார். அவரது சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, அவரைத் துக்கப்படுத்தாமல் வாழ கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
留言