top of page

வெள்ளி, ஏப்ரல் 18 || ஆண்டவரை சிலுவையிலறைந்தது யார்?

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Apr 18
  • 1 min read

வாசிக்க: மத்தேயு 27: 11-24


அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. - 1 கொரிந்தியர் 2:8 



நல்ல வெள்ளியில் அப்படி என்ன நல்லது இருக்கிறது? என்று ஒரு அவிசுவாசி கேட்டபோது, அவருக்கு ஒரு விசுவாசி சொன்ன பதில்: அது நல்ல வெள்ளியாயிருப்பதற்கான காரணம் அதுவே கர்த்தரின் வெள்ளி! இயேசு சிலுவையில் மரித்தது தேவனுடைய பின்யோசனையல்ல; முன்னேமே வைத்திருந்த  அவருடைய ஒரே திட்டம்! கொடுமைக்காரர் தேவகுமாரனை சிலுவையிலறைந்த தீமையான செயலையும் தேவன் உலகத்தின் இரட்சிப்புக்காகப் பயன்படுத்தினார். 1 கொரிந்தியர் 2:8ல் பவுல் அதை ஒருவனும் அறியவில்லை; அறிந்திருந்தால், மகிமையின் கர்த்தரை சிலுவையில் அறையமாட்டார்களே என்கிறார்.


இயேசு யாரென்று பிலாத்து அறியவில்லையாதலால், அவரை சிலுவையிலறையும்படி ஒப்புக்கொடுத்தான். இயேசு செய்த அற்புதங்களை, சுகமாக்குதலைப்பற்றி அவன் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பான். நற்செய்தி நூல்களை வாசிக்கும்போது பொந்தியுபிலாத்துவின் ஆத்துமா சித்திரவதைப்பட்ட ஆத்துமா என்று அறிகிறோம் - தன்னுடைய பணியின் நிர்ப்பந்தத்துக்கும், இயேசு யார் என்று அறிந்துகொள்ளும் மெய்யான ஆவலுக்கும் இடையே அல்லல்பட்டான். இயேசுவிடம் அவன் கேட்டது - சத்தியமாவது என்ன? (யோவான் 18:38) தேவையில்லாமல் கேட்ட கேள்வி அல்ல அது. சத்தியத்தை அறிந்துகொள்ள அவன் விரும்பினான். ஆனால், இறுதியில் ஜனங்களின் கூக்குரலுக்கு அவன் அடிபணிந்தான். ஆகவேதான் பிலாத்து, மகிமையின் தேவனை சிலுவையிலறைந்த கொடுமைக் குற்றத்தைச் செய்தான். 


அன்பானவர்களே, ரோமர்கள், யூதர்கள், படைவீரர்களான வேறே யாரையோ சுட்டிக்காட்டுவதற்கு முன்பு, நமக்கும்கூட இந்தக் காரியத்தில் பங்கு உண்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஏசாயா 53:5, நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்  என்று கூறுகிறது. இந்த நல்ல வெள்ளியில், கிறிஸ்து மரணத்தை சுற்றிலுமிருந்த கொடூர சூழ்நிலையில் நாம் கவனம் செலுத்தி, அவருடைய மரணத்துக்காக துக்கித்துப் புலம்பாமல், பரலோக பிதா தமது ஒரே குமாரனை நமக்காகவே கோரக் கொல்கொதாவில் நொறுக்கப் பிரியமாயிருந்தார் என்பதை எண்ணுவோம். தேவன் நம்மீது வைத்த அளவற்ற அன்புக்காக, நம் பாவக் குற்றத்தை நீக்கும்படி அவர் செய்த தியாகத்துக்காக அவருக்கு நம் நன்றியறிதலைச் செலுத்துவோம். 

ஜெபம்:  ஆண்டவரே, என்னை இரட்சிக்க உமது ஒரே குமாரனை சிலுவையில் மரிக்கும்படி அனுப்பின உமது மாபெரும் தியாகத்துக்காக நன்றி செலுத்துகிறேன். என் பாவங்கள்தான் இரட்சகரை சிலுவையில் அறைந்தன; என் மீறுதல்கள்தான்  கோர மரணத்துக்கு நேராய் அவரை நடத்தின. இந்த ஆச்சரியமான அன்புக்கு நான் என்ன கொடுப்பேன்? என்னையே ஜீவபலியாய்த் தருகிறேன். ஆமென். 



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Коментарі

Оцінка: 0 з 5 зірок.
Ще немає оцінок

Додайте оцінку
bottom of page