top of page

வெள்ளி, ஏப்ரல் 11 || கொடுத்தலைப்பற்றி இயேசு கூறியவை

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Apr 11
  • 1 min read

வாசிக்க: மத்தேயு 6:  1-4



நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்வதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. - மத்தேயு 6:3



ஒரு உண்மையுள்ள விசுவாசி மாய்மாலத்துக்கு எதிர்த்து நிற்பதற்கு ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். முதல் வசனத்தில் இயேசு இரண்டு எச்சரிக்கைகளைக் கூறுகிறார் - முதலாவதாக, மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார். மற்ற ஜனங்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்படும் தர்மம் தேவராஜ்ஜியத்தின் நீதியல்ல. தமது சீஷர்கள் இந்த நீதியையே கற்றுக்கொள்ள விரும்பினார் இயேசு. அவர் காணவிரும்பும் நீதி சற்று வித்தியாசமானது - அது மக்கள் நினைப்பதுபோல் அல்ல, அவர் நினைப்பதுபோலவே செய்யப்படுகின்ற நீதி! இரண்டாவது, வசனத்தின் பிற்பகுதியில் இயேசு கொடுத்த எச்சரிக்கை - செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை! ஒன்றைக் கவனியுங்கள் - பரலோகம் தரும் பலனைக்  கொஞ்சமாய் பெறுவார்கள் என்றல்ல ஒரு பலனையும் பெறமாட்டார்கள் என்று அவர் சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார்? அவர்கள் தேவனுடைய கிருபைக்கு அந்நியர்களாயிருந்ததே காரணம்!   


அடுத்த வசனத்தில், மெய்யான கொடுத்தலின் ஆவியை தங்களுக்குள் விசுவாசிகள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று இயேசு கூறினார். அவர், தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கோ, பாராட்டப்படுவதற்கோ பகிரங்கப்படுத்த கூடாது  என்று கூறினார். ஜனங்களின் கைதட்டுதலைக் கேட்க, கொடுக்கவே கூடாது; அந்தக் கைதட்டுதலை நாம் இரசித்தால், அந்தப் பலனை மட்டுமே நம்மால் பெற்றுக்கொள்ள முடியும். பரலோகத்தின் பலன் நமக்குக் கொடுக்கப்படாது! மாறாக, நாம் கொடுக்கும்போது நமக்கே அது மறைவாயிருக்கவேண்டும்!  பாராட்டத்தக்க விதத்தில் நீ எதையும் செய்யவில்லை என்று நீயும் அறியாதிருக்கும்படி அதை மறைவாய் வைக்கவேண்டும்! அன்பானவர்களே, ஆணடவரின் கண்கள் நம்மீது இருக்கிறது, அவர் நாம் செய்வதை இரகசியமாய்ச் செய்கிறோமா என்பதை மட்டுமல்ல, நாம் செய்வதின் நோக்கம் என்ன என்பதையும் பார்க்கவே விரும்புகிறார். எனவே, நற்செயல்கள் செய்கையில் அது தேவனுடைய மகிமைக்காகவே செய்யப்படவேண்டும் என்பதில் நாம் கவனமாயிருப்போம். 
ஜெபம்:  ஆண்டவரே, நான் தர்மஞ்செய்யும்போது, அதை பகிரங்கமாய் பிறருக்கு அறிவித்து, அவர்களது பாராட்டைப் பெறக்கூடாது. அதை சரியான நோக்கோடு கொடுத்து உம்மைப் பிரியப்படுத்தவும், உமது ஆமோதிப்பைப் பெறவும், அதன் விளைவாக பரலோக பலனை உம்மிடமிருந்து பெறவும் கிருபை தாரும். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page