வெள்ளி, அக்டோபர் 03 || நற்செய்தியைப் பரப்புவதே நம்முடைய பிரதான கடமை
- Honey Drops for Every Soul
- Oct 3
- 1 min read
... நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். - மாற்கு 16:15
தாம் பரலோகத்துக்கு ஏறிச்செல்லுவதற்கு முன்பாக இயேசு கடைசியாகச் சொன்ன ஒரு கட்டளை: உலகமெங்கும் போய் ... சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். இதைத்தான் நாம் பிரதான கட்டளை என்கிறோம். ஒவ்வொரு விசுவாசியும் இந்த அழைப்புக்குச் செவிகொடுத்து, அவர்கள் சந்திக்கும் மக்கள் ஒவ்வொருவரிடமும் இரட்சிப்பின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். ஒரு மிஷனரி ஸ்தாபனம், பணித்தளம் சென்று ஊழியம் செய்ய விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு வந்தபோது அவர்களிடம் கேட்கின்ற ஒரே கேள்வி: நீங்கள் எத்தனை பேரை கிறிஸ்துவுக்காக சம்பாதித்தீர்கள்? அவர்களை ஏன் இதைப் பழக்கமாக வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, ஸ்தாபனத்தின் தலைவர் சொன்ன பதில் மிகவும் ஆழமானது! அவர், தாங்கள் வசிக்கின்ற இடத்திலே தங்கள் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளாதவர்கள், வேற்றிடம் செல்லும்போது அங்கும் அவர்களால் பகிர்ந்துகொள்ள முடியாது என்று கூறினார்.
அன்பானவர்களே, நாம் பலமுறை சுவிசேஷத்தைப் பகிர்கின்ற பணியை முழுநேர ஊழியர்களாய் அர்ப்பணித்து நியமிக்கப்பட்ட சுவிசேஷகர், மேய்ப்பர், மிஷனரிகளிடத்தில் கொடுத்துவிடுகிறோம். ஒவ்வொரு விசுவாசியும் சுவிசேஷம் சொல்லுகின்ற ஆவியை உடையவர்களாயிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நம் தெருவில் வசிக்கும் அண்டைவீட்டாரைக் குறித்ததான, உலகெங்கிலும் நடக்கின்ற சுவிசேஷப் பணியைக் குறித்ததான பாரம் நமக்கு வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒவ்வொரு மிஷனரிதான், காரணம் முழு உலகமும் மிஷனரி பணித்தளம்தான். சந்திக்கப்படாத பழங்குடி மக்களின் இருப்பிடம் சென்று, பணிசெய்து, மிகப் பெரிய சாட்சிகளுடன் வந்தவர்கள்தான் மிஷனரிகள் என்று நாம் எண்ணிவிடக் கூடாது. நம்மால் தூர தேசங்களுக்குப் பயணம் செய்ய முடியாவிட்டாலும், நம் ஜெபத்தாலும், பொருளாலும் அங்கே செல்லமுடியும் - அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி நம் ஜெப அறைகளில் தேவனிடம் விண்ணப்பம் பண்ணுகின்ற, அறுவடைப் பணிசெய்ய அவர்கள் போகையில் தேவைகளைச் சந்திக்கின்ற மாபெரும் பொறுப்பு நமக்கு உண்டு.
ஜெபம்: ஆண்டவரே, அழிந்துபோகின்ற ஆத்துமாக்களைக்குறித்த பாரத்தை எனக்குத் தாரும். இயேசு என்னை எப்படி இரட்சித்தார், எப்படி புதுவாழ்வு தந்தார் என்று உலகுக்குச் சொல்ல உதவும். பிரதான கட்டளையை நான் அல்லத்தட்டாது, இந்த நற்செய்தியை எனக்கு அருகிலுள்ளவர்களிடம் சொல்லுவேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments