வியாழன், மார்ச் 06 || இப்போதே மனந்திரும்புங்கள், தாமதிக்காதீர்கள்!
- Honey Drops for Every Soul

- Mar 6
- 1 min read
வாசிக்க: அப்போஸ்தலர் 13: 38-41
அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
- மத்தேயு 4:17
மனந்திரும்புதல் என்பது ஒருவரது மனமாற்றமே. அது பாவத்திலிருந்து திரும்பி கர்த்தரிடம் வருவது. மனந்திரும்புதலும் விசுவாசமும் அருகருகே உள்ளது. பாவத்திலிருந்து உண்மையாக மனந்திரும்பாவிட்டால் இயேசுகிறிஸ்துவை உண்மையாக விசுவாசிப்பது இயலவே இயலாது; அல்லது உண்மையான விசுவாசம் இல்லாமல் மெய்யான மனந்திரும்புதலும் வராது. இவைகள் இரண்டும் பரிசுத்த ஆவியினது கிரியையின் இரண்டு பரிமாணங்கள் - பாவிக்கு பாவத்தைக்குறித்து உணர்த்துவதும், கிறிஸ்துவிடம் கொண்டுவருவதுமே! கடந்தகாலத்தில் நாம் தவறான எண்ணம் கொண்டிருந்ததை உணர்ந்து, வரப்போகும் எதிர்காலத்தில் சரியாய் எண்ணம் கொள்ளத் தீர்மானிப்பதுதான் மனந்திரும்புதலில் உள்ள காரியம்! என்கின்றார் ஒரு ஆசிரியர். ஒரு மனந்திரும்பிய நபர், முன்பு தான் கொண்டிருந்த மனநிலை சரியானதுதானா என்பதைக் குறித்து மறுபடியும் சிந்திப்பதால், அவரது எண்ணத்தில் மாற்றம் உண்டாகிறது - புதிய விதத்தில் தேவனைக்குறித்து, பாவத்தைக்குறித்து, பரிசுத்தத்தைக்குறித்து, தேவசித்தத்திற்கேற்ப செயல்படுவதைக்குறித்து அவர் சிந்திக்கிறார். இத்தகைய மெய்யான மனந்திரும்புதல் இரட்சிப்புக்கு நேராய் அவரை நடத்துகிறது. தேவன் தம்மிடம் ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் மனந்திரும்பி தேவனிடத்தில் வர முடியாது! (யோவான் 6:44)
அன்பானவர்களே, நாம் எல்லாரும் பாவத்தில் பிறந்தோம் என்பதால் பாவம் செய்ய நாம் விரும்புகிறோம். ஒரு பறவை பறப்பதுபோல, ஒரு மீன் நீந்துவதைப்போல இயல்பாகவே நாம் பாவம் செய்கிறோம். வஞ்சகத்தன்மை, சுயநலம், சுயவிருப்பம், பெருமை இவற்றைக் கற்றுக்கொள்ள ஒரு குழந்தை எந்தவிதக் கல்விச்சாலைக்கும் செல்லவேண்டிய அவசியமில்லை. இவைகள் தானாகவே அவர்களுக்குள் எழும்புகிறது; நமது விழுந்துபோன நிலைக்கு இதுவே சான்று! மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டாலே ஒழிய நம்மால் தேவராஜ்யத்துக்குள் பிரவேசிக்கவே முடியாது. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று கூறுகிறது நீதிமொழிகள் 28:13. எனவே, நம் பரிதாபமான நிலையை உணர்ந்து, நம்மை நாமே இரட்சிக்க முடியாது என அறிந்து, நம்மை இரட்சிக்கக் கூடிய ஒரே ஒரு தேவனான இயேசுகிறிஸ்துவிடம் வரும்படி திரும்புவோம்.
ஜெபம்: ஆண்டவரே, என் இருதயத்தைக் கடினப்படுத்தி, பாவ வழிகளில் நான் நடக்கிறேன். இரட்சகரே, இன்று என்னை உணர்த்தியபடியால், நான் பாவி என்று அறிக்கையிடுகிறேன். என் பாவத்தை மீறுதலை அறிக்கையிடும் என்னை இரக்கத்துடன் மன்னியும்; ஆண்டவராக இருதயத்தில் வாசம் செய்யும். ஆமென். தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments