வியாழன், மே 01 || தேவனுக்கு உள்ளார்ந்த விதமாய் கீழ்ப்படிவதே விசுவாசம்
- Honey Drops for Every Soul

- May 1
- 1 min read
வாசிக்க: யோசுவா 6: 15-20
.. எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில் அலங்கம் இடிந்துவிழுந்தது; ... - யோசுவா 6:20
இந்த நம்பமுடியாத சம்பவமானது எபிரெயர் 11:30ல் எழுதப்பட்டுள்ளது: விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது! யாருடைய விசுவாசம் இங்கே குறிப்பிடப்படுகிறது? யோசுவா, தலைவர்கள் மற்றும் ஜனங்களாகிய அனைத்து இஸ்ரவேலரது விசுவாசமே! யோசுவா மற்றும் ஜனங்களுடைய எவ்விதக் கேள்வியுமற்ற முழுமையான கீழ்ப்படிதலும் விசுவாசமுமே பெரிய வெற்றிக்கு நேராக நடத்திற்று. கர்த்தரின் வாக்குத்தத்தத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாசம் வைத்து, அவருடைய அசாதாரணமான கட்டளைக்கு கீழ்ப்படிந்தார்கள். தேவனைப் பிரியப்படுத்துகிற விசுவாசம்: அவருக்குக் கீழ்ப்படிகிற, தேவன் அதற்குரிய பலனை தருவார் என்ற விசுவாசமே! எபிரெயர் 11:30ல் கூறப்பட்டுள்ள சுற்றிவரப்பட்டு என்ற சொல்லைக் கவனியுங்கள்! எரிகோவைச் சுற்றி ஒருமுறையோ அல்லது ஆறு முறையோ வந்து, அவர்கள் ஆர்ப்பரித்தால் என்ன நடந்திருக்கும்? எதுவும் நடந்திருக்காது! அரைகுறைக் கீழ்ப்படிதல் கீழ்ப்படியாமையே! விசுவாசமும் கீழ்ப்படிதலும் அருகருகே ஓடுகின்றன. விசுவாசம் கீழ்ப்படிதல் இரண்டுமே ஒன்றாய்க் கட்டப்பட்டிருக்கின்றன என்று ஸ்பர்ஜன் கூறுகிறார். கீழ்ப்படிகிறவன் தேவனில் நம்பிக்கை வைக்கிறான்; தேவனில் நம்பிக்கை வைக்கிறவன் கீழ்ப்படிகிறான். இஸ்ரவேல் ஜனங்கள் கீழ்ப்படிந்தபடியால், அவர்களது கீழ்ப்படிதலோடு தேவன் இணைந்து, மதில் விழும்படியான தெய்வீகச் செயலின் ஆசீர்வாதத்தை அவர்கள் அனுபவிக்கக் கிருபை செய்தார்.
அன்பானவர்களே, 99 சதவீதம் அல்ல, நம் முழுமையான, இருதயபூர்வமான கீழ்ப்படிதலையே தேவன் விரும்புகிறார். ஒருவேளை தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாதது அதனால்தானோ! நம்மை நாம் சற்று ஆராய்ந்துபார்ப்போம் அசைக்கமுடியாத எரிகோவைச் சுற்றி ஆறுமுறை மட்டுமே நாம் சுற்றி வந்தோமோ? அரைகுறையான கீழ்ப்படிதலைக் காண்பித்தோமா? எரிகோ நமக்குக் கற்பிக்கும் பாடம் கர்த்தர் சொன்னபடி நடவுங்கள் என்பதே! அவரது அதிகாரத்தை எதிர்த்தோ அல்லது அதற்கு விரோதமாகவோ நாம் செயல்படக் கூடாது.
ஜெபம்: ஆண்டவரே, விசுவாசமும் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிதலும் தாண்ட முடியாத மிகப் பெரிய தடைகளைக்கூடத் தகர்த்துப்போடுகின்றன. உம்மேலும் உமது வழிகளின் மேலும் நான் நம்பிக்கை வைக்க உதவும். நான் கீழ்ப்படிந்தால் பெரிய வல்லமையான காரியங்களைச் செய்து வெற்றியைத் தருகிறீர். ஆமென்.தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments