வியாழன், ஜூலை 31 || கர்த்தர் தந்த தாலந்துகளை வீணாக்காதிருங்கள்!
- Honey Drops for Every Soul

- Jul 31
- 1 min read
வாசிக்க: யாத்திராகமம் 3: 10-14, 4: 1-13
.. அவர்கள் என்னை நம்பார்கள், என் வாக்குக்குச் செவிகொடார்கள் .. நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்.
- யாத்திராகமம் 4:1,13
ஒரு கோழி மலையின் கீழே வயல்வெளியில் நடந்து சென்றது. ஒருநாள் அது தரையில் கிடந்த ஒரு முட்டையைக் கண்டது; சிறிது நேரம் கழித்து, முட்டையிலிருந்து தட்டுகிற சத்தம் கேட்டது; அதிலிருந்து கழுகுக் குஞ்சு ஒன்று வெளிவந்தது! அதைத் தன் குஞ்சாகவே எண்ணி வளர்த்தது அந்தக் கோழி. கழுகுக்குஞ்சும் கோழியைப்போலவே வாழ்ந்துவந்தது. ஒரு நாள் கழுகு ஒன்று கெம்பீரமாக வானில் பறப்பதைக் கண்ட அந்த கழுகுக்குஞ்சு கோழியிடம், அடேங்கப்பா! அது என்ன பறவை என்று கேட்டது. அதற்கு, அதுவா! அதுதான் கழுகு என்றது கோழி. அது என்ன கெம்பீரமாகப் பறக்கிறது. நான் மட்டும் ஒரு கழுகாக இருந்தால் எப்படியிருக்கும் என்ற குஞ்சைப் பார்த்து, ஆனால் நீதான் என்னைப்போல ஒரு கோழியாயிற்றே. உன்னால் அப்படிப் பறக்கமுடியாது என்றது கோழி. நாட்கள் கடந்தன. தான் யார் என்பதை அறியாமலேயே அந்தக் கழுகுக்குஞ்சு வளர்ந்தது. கோழியைப் போலவே குப்பையைக் கிளறி, கிடைத்ததைத் தின்று வருடக்கணக்கில் வாழ்ந்து ஒருநாள் மாண்டேபோனது. பரிதாபம்!
அன்பானவர்களே, அந்தக் கழுகுக்குஞ்சு, தான் ஒரு கோழி என்று அது நம்பியதால் அதன் நோக்கம், இலக்கு கனவாகவே இருந்துவிட்டது. கர்த்தர் அதற்கு கழுகுக்குரிய எல்லா தன்மைகளையும் கொடுத்திருந்தபோதும், கோழியின் வார்த்தையை நம்பியதால், தனக்குள் இருந்த திறமைகளைப் கடைசிவரை பயன்படுத்தவே இல்லை. நாமும்கூட பல சமயங்களில், எனக்கு மாத்திரம்... அல்லது என்னால் மட்டும் முடிந்தால்... என்று கனவுகண்டுகொண்டே நாட்களைக் கடத்துகிறோம். சாத்தானுடைய பொய்களுக்கு நாம் செவிகொடுக்காமல், கர்த்தர் நமக்குள் வைத்திருக்கும் தாலந்துகளை அவரது பெலத்தோடுகூட பயன்படுத்தி, அவர் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளை நிறைவேற்றுவோம். வெந்ததைத்தின்று வெறுமனே வாழ்ந்து விதிவந்தால் சாவு என்று வாழாதிருப்போம். ஜெபம்: தகப்பனே, எதிர்மறையான எண்ணங்கள் என் வாழ்வைச் சீர்குலைக்க அனுமதித்தேன். சத்துரு கூறிய பொய்களை நம்பினேன். நீர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த தவறினேன். என்னை மன்னியும். இனியாவது நீர் கொடுத்த தாலந்துகளை உமக்கென்று பயன்படுத்த உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments