வியாழன், ஜூலை 24 || முழுபெலத்தையும் ஒன்றாகக் கூட்டுங்கள்!
- Honey Drops for Every Soul

- Jul 24
- 1 min read
வாசிக்க: லூக்கா 4: 1-13
... கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
- எபேசியர் 6:10
வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கு விடாமுயற்சியும் சுயக்கட்டுப்பாடும் மிகவும் அவசியமானவை. இந்த சரீரத்தில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் பலவிதமான சோதனைகளை நாம் சந்திக்கிறோம். கர்த்தரின் பிள்ளைகளான நாம் அரணைக் காத்துக்கொள்பவர்களாக இருக்கவேண்டும். (நாகூம் 2:1) எப்படி அதைச் செய்யமுடியும்?
முதலாவது, நமது புறம்பான மனிதனில் நாம் பெலவீனப்பட்டாலும், உள்ளான மனிதனில் அனுதினமும் பெலப்படவேண்டும். (2 கொரிந்தியர் 4:16) கர்த்தருக்கு நாம் காத்திருக்கும்போது நாம் ஆவிக்குரிய பெலனை அடைகிறோம். கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து எழும்புகிறவர்களாக இருக்கிறோம். கர்த்தருக்குக் காத்திருத்தல் என்பது அவரது வார்த்தையால் போஷிக்கப்பட்டு, அனுதினம் ஜெபத்தில் உரையாடிக் கொண்டிருப்பதே!
இரண்டாவதாக, நாம் பரிசுத்த ஆவியின் நிறைவைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும். அப்போஸ்தலர் 1:8, பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து ... சாட்சிகளாயிருப்பீர்கள் என்று கூறுகிறது. பரிசுத்த ஆவியினால் நாம் நிறைந்திருந்தால் மட்டுமே சோதனைகளை நாம் சுலபமாக மேற்கொள்ளமுடியும். வெள்ளம்போல் சத்துரு வரும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். (ஏசாயா 59:19)
மூன்றாவதாக, நம் விசுவாசத்தை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். நம் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். எனவே, நாம் சோதிக்கப்படுகையில் தேவனுடைய வார்த்தைகளை மறுபடியும் மறுபடியும் விசுவாசத்தோடு அறிக்கையிடுவோம். இந்த விசுவாசமே சாத்தானின் தீக்கணைகளை அவித்துப்போடும் கேடகம். (எபேசியர் 6:16)
நான்காவதாக, ஆண்டவருடைய பிரசன்னத்தில் நிலைத்திருக்கவேண்டும். தாவீது, கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருப்பதால் நான் அசைக்கப்படாமலிருக்கிறேன் என்று கூறுகிறார். (சங்கீதம் 16:8)
எனவே, அருமை நண்பர்களே, சாத்தானுக்கு நம் வாழ்வில் இடங்கொடாதிருப்போம். ஆவியானவரின் உதவியினால் கர்த்தரிலும் அவரது வல்லமையிலும் இன்னும் அதிகமாகப் பெலப்படுவோம். ஜெபம்: தேவனே, அனுதினமும் வேதவாசிப்பு மற்றும் ஜெபத்தில் அதிகமாக உம்முடன் நேரம் செலவிட்டு, உமது ஆவியினால் நிரப்பப்பட்டு உமது சமுகத்தில் தரித்திருக்க எனக்கு கிருபை தாரும். விசுவாசக் கேடகத்தைப் பிடித்துக்கொண்டு பிசாசுக்கு எதிர்த்து நின்று அவனை மேற்கொள்ள உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments