வியாழன், ஜூலை 17 || பரலோகப் பொக்கிஷம்!
- Honey Drops for Every Soul

- Jul 17
- 1 min read
வாசிக்க: லூக்கா 12: 32,33; 18:22-25
.. உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, .. உலகப்பொருளால் உங்களுக்கு சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
- லூக்கா 16:9
லூக்கா 12:33ல், தம்மைப் பின்பற்ற விரும்பும் சீஷர்கள் தங்களுக்குண்டானவற்றை விற்று தரித்திரருக்குக் கொடுக்கவேண்டும் என்றும், அதற்குப் பின்பே தன்னைப் பின்பற்றமுடியும் என்றும் கூறினார். செல்வந்தனான வாலிபனிடம், இயேசு இதே வார்த்தைகளைக் கூறினார். ஆனால் அந்த வாலிபனுக்கு அப்படிச் செய்ய மனதில்லாதிருந்தபடியால் அவன் தேடிய நித்திய வாழ்வை அவன் அடையமுடியாமற்போயிற்று. ஆனால், அப்போஸ்தலர் 4ம் அதிகாரத்தில் பர்னபாவும் மற்றும் பலரும் தங்களுடையவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயக்கமின்றி முன்வந்தனர். தங்களுக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாத அவர்களுக்குக் கிடைத்த பலன்தான் என்ன? நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் பதில் செய்யப்படும். அதாவது நமது முதலீட்டிற்கு உயிர்த்தெழுதலின்போது பலன் கிடைக்கும். கொடுப்பவர்கள் தடையோ தயக்கமோ இன்றி கொடுப்பதால் அநேக சிநேகிதர்களை இங்கேயே சம்பாதித்துவிடுகிறார்கள். அவர்களுக்காக நித்தியவீடுகள் பரலோகில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன அல்லவா? அவைகளில் நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படுவோம்; வரவேற்கப்படுவோம். 1 தீமோத்தேயு 6:17-19ல், ஐசுவரியவான்கள் தாராளமாய்க் கொடுக்கிறவர்களாகவும் உதாரகுணமுள்ளவர்களாக இருக்கவும் பவுல் அறிவுரை சொல்லுகிறார். அப்படிச் செய்வதால் அவர்கள் நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்வதோடு நல்ல ஆதாரத்தை வருங்காலத்திற்காக பொக்கிஷமாக சேர்த்துவைப்பார்கள் என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.
அன்பானவர்களே, இவ்வளவும் தெரிந்தும் இன்னமும் நாம் தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதற்குத் தயங்குவது நல்லதல்ல. நம் இதயங்களையும் கைகளையும் விரிவாய்த் திறந்து தடையின்றி கொடுப்பவர்களாவோம். கர்த்தர் பலனைத் தருவார். ஜெபம்: பிதாவே, அந்த செல்வந்தனான வாலிபனைப்போல இவ்வுலக ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைத்து நீர் வைத்திருக்கும் பலனை நான் இழந்துபோகாமலிருக்கும்படி, அவற்றைத் தேவையுள்ளவர்களுக்கு கொடுத்து பரலோகில் பொக்கிஷம் சேர்க்க உமது கிருபையைத் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments