top of page

வியாழன், ஜூன் 19 || ஒரு அவசரச் செய்தி!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 19
  • 1 min read

வாசிக்க: 1 பேதுரு 5:6-9


சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள்... - நாகூம் 2:1

மேலே கூறப்பட்ட வசனம் மூலம் அவசரச் செய்தியை அனுப்புகிறார் ஆண்டவர். சத்துருவாகிய பிசாசு உன்னை எதிர்த்து நாசமாக்கும்படி வருகிறான். எனவே, ஜாக்கிரதை! உன்னைக் காத்துக்கொள்! என்பதே அவரது செய்தியின் சாராம்சம். இதை உணர்ந்து நாம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ஒரு நாட்டின் ராஜாவிடம் உளவாளிகள் வந்து, நாட்டிற்கெதிராக எதிரிகள் படையெடுத்து வருகிறார்கள் என்று சொன்னால், அவன் தன் மந்திரிமாரை அழைத்து அவசரக்கூட்டம் நடத்தி, எதிரியிடமிருந்து எப்படி நாட்டைக் காப்பது, எதிரியை எப்படி வீழ்த்துவது என்ற காரியங்களைக்குறித்து ஆலோசித்து, உடனே முடிவு செய்வான் அல்லவா? அப்படி அவன் செய்யத் தவறினால் அவனும் அவனது குடிமக்களும் எதிரியிடம் சிறைப்பட்டுவிடுவார்கள். நாமும் அதுபோன்ற நிலையில்தான் உள்ளோம். நாம் தாமதம் செய்தால், சத்துருவாகிய பிசாசு நம்மை எளிதில் மேற்கொண்டு நம்மை வீழ்த்தி நமது ஆத்துமாக்களைச் சிறைப்பிடித்துவிடுவான். அவன் ஏன் தேவபிள்ளைகளாகிய நம்மையே குறிவைக்கிறான்? நம்மிடம் இரட்சிப்பு, நித்திய ஜீவன் போன்ற அநேகப் பொக்கிஷங்கள் உண்டு என்பதாலேயே, நம்மைத் தாக்கி, காயப்படுத்தி, அழிக்கத் திட்டமிடுகிறான் சாத்தான். அவன் கொம்புடன், கருப்பு உடையுடன் வருவதில்லை. அப்படி வந்தால்தான் நாம் சுதாரித்துக்கொள்வோமே! இன்றைக்கு அவன் மிகவும் தந்திரமாக செயல்படுகிறான். எனவே நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். நமது ஆவி ஆத்துமா சரீரத்தை அனுதினம் பரிசுத்தமாகக் காத்துக்கொள்ளவேண்டும்.


அன்பானவர்களே, விலையேறப்பெற்ற இயேசுவின் இரத்தத்தால் நாம் கழுவப்பட்டிருக்கிறோம் என்பதை நினைத்து ஆவியானவரது உதவியுடன், சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொண்டு,  (எபேசியர் 6: 14-17) சாத்தானை எதிர்த்து நின்று மேற்கொள்வோம்.

ஜெபம்: தேவனே, இன்றைக்கு நீர் தந்த இந்த அவசரச் செய்திக்காக நன்றி. இதை நான் ஏற்று, எனது ஆவி ஆத்துமா சரீரத்தை பிசாசின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கிருபை தாரும். சாத்தானின் சதியாலோசனைகளுக்கு தப்பிக்கொள்ளும்படிக்கு, உமது ஆவியால் என்னை நிரப்பும். ஆமென்.


தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page