top of page

வியாழன், ஜூன் 12 || தோல்விகள் உங்களை அழிக்கக்கூடாது!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 12
  • 1 min read

வாசிக்க: எரேமியா 32: 10-14


தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு.. வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. - 2 நாளாகமம் 16:9

ஜான் மில்லெய்ஸ் என்ற புகழ்பெற்ற ஓவியர் தனது ஒஃபீலியா என்ற ஓவியத்தை 1853ம் ஆண்டு பார்வைக்கு வைத்தபோது, அது எல்லா மக்களையும் ஒருசேரக் கவர்ந்தது. இன்றும் அது லண்டன் மாநகரிலுளள ஒரு ஓவியக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஒரு விமர்சகர் அதை மோசமாக விமர்சித்துவிட்டார். அவரது வார்த்தைகள் மில்லெய்ஸின் வாழ்க்கையை மிகவும் பாதித்துவிட்டன. அந்த ஓவியத்தைக்குறித்த பாராட்டுதல்களைக் கேட்டு மகிழ்வதற்குப் பதிலாக, இப்படி ஒரே ஒரு மனிதன் சொன்ன எதிர்மறை விமர்சனத்தை முக்கியப்படுத்தி தன் வாழ்நாள் முழுவதுமாக வருத்தத்துடன் கழித்த இவரைப்போல பரிதாபமான மனிதர் யார்தான் இருக்கமுடியும்! ஒரு வாலிபன் அணிந்திருந்த ஒரு டீ ஷர்ட்டில், நான் முயற்சியைக் கைவிட்டேன் என்று பெரிய எழுத்தில் எழுதியிருந்தது. உற்று நோக்கினால் அதற்குக் கீழே ஒரு சிலுவை வரையப்பட்டு, அதன்கீழே, நானோ என் முயற்சியைக் கைவிடவில்லை என்று எழுதப்பட்டிருந்தது.  நாம் எதைப் பார்க்கிறோம்? எதிர்மறையான காரியங்களையா? அல்லது நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்களையா? ஒவ்வொரு நாளும் நாம் தோல்வி, தனிமை, கவலை, துக்கம், சந்தேகம் மற்றும் வெறுப்பு போன்ற பலவகை உணர்ச்சிகளால் தாக்கப்படுகிறோம். ஆனால் எந்த நிலையில் நாமிருந்தாலும் நமது நண்பர் வந்து நம்மைத் தேற்றும் வார்த்தைகளைக் கூறும்போது நாம் ஆறுதலடைவது மட்டுமல்ல, உறசாகமும் அடைகிறோம். ஒருமுறை என் நண்பர் ஒருவர், எனக்குச் சொல்லப்படும் ஊக்கப்படுத்தும் வார்த்தை என்னை குறைந்தது ஒரு மாதத்திற்காவது உற்சாகமாய் வைக்கப் போதுமானது என்றார். இப்படிப்பட்ட நண்பர் எல்லாருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை. ஆனால், நாம் தவறிப்போகும் நேரங்களிலும் நம்மை வெறுத்துவிடாமல் நம்மை முன்னேற்ற நினைக்கும் தேவன் நமக்குண்டு.


அன்பு நண்பர்களே, ஒருபோதும் தோல்விகள் உங்கள் வாழ்வை சீரழிக்க விடாதிருங்கள். சிலுவையில் வெற்றிசிறந்த ஆண்டவரது கரத்தைப் பற்றிக்கொண்டு தோல்வியைவிட்டு வெளியே வாருங்கள்.

ஜெபம்: பரம தகப்பனே, நான் தோல்வியைச் சந்திக்க நேர்கையில் நான் சுயபரிதாபத்தில் மூழ்கிவிடாமல் உமது உதவியை நாடி உமது ஆலோசனை பெற்று எனது தவற்றைத் திருத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற்றமடைய உமது வல்லமையைத் தாரும். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page