வியாழன், ஜூன் 05 || குயவனின் வீட்டிலே உள்ள பாடங்கள்
- Honey Drops for Every Soul

- Jun 5
- 1 min read
வாசிக்க: எரேமியா 18:1-2
நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். - எரேமியா 18:2
எரேமியாவிடம் குயவன் வீட்டிற்குப் போகும்படி சொன்னார் கர்த்தர். அங்கே, அனுதின வாழ்விலிருந்து ஒரு பாடத்தைக் கற்கச் சொன்னார். குயவனின் வீட்டில் எரேமியா கண்ட காட்சி - குயவன் சுற்றுகின்ற சக்கரத்தின்மேல் களிமண் வைத்து, அதை ஒரு பானையாக உருவாக்க தன் கைகளினாலே வனைந்துகொண்டிருந்தான். ஏனோ அது கெட்டுப்போயிற்று. குயவனின் கைவேலையை கவனித்த எரேமியா, அந்த களிமண் உருண்டை வளைவதற்கு தன்னை விட்டுக்கொடுக்காததைக் கண்டான். ஆனாலும், குயவன் அந்தக் களிமண் உருண்டையை தூக்கி எறியாமல், அதை வேறு ஒரு பானையாக வனையத் தொடங்கியதையும் எரேமியா கவனித்தான். ஆண்டவரின் கிரியையும் இப்படித்தான் இருக்கிறது. ஆண்டவர் குயவனைப் போல இருக்கிறார்; நாமோ, அவரது கரங்களில் களிமண்ணாய் இருக்கிறோம். நம்மைத் தொடர்ச்சியாய் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் அவர். நமக்கென்று அவரிடத்தில் ஒரு நோக்கம் உண்டு; ஆனால் நாம் எப்படி நடந்துகொள்ளுகிறோம் அல்லது வனையும்போது எப்படி வளைந்துகொடுக்கிறோம் அல்லது அவர் உருவாக்க நம்மை எப்படி விட்டுக்கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, நம்மை வேறுவிதமாக உருவாக்குகிறார் அவர்!
இந்த உவமை நமக்கு மூன்று காரியங்களைச் சொல்லித் தருகிறது. அதன்
முதல் நோக்கம், கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார் என்று காண்பிக்கிறது. அவர் தனிநபர்மேலும், மக்கள்மேலும், தேசங்கள்மேலும் ராஜரீகம் பண்ணுகிறார். (ஏசாயா 45:9)
அதன் இரண்டாவது நோக்கம், தமது ஜனங்களது பாவம் அல்லது அசுத்தத்தை அவர் பொறுத்துக்கொள்ளமாட்டார் என்று காண்பிப்பது.
மூன்றாவது நோக்கம், நம் பாவத்தைவிட்டு மனம் திரும்பினால், அவர் நம்மை மறுபடியும் உருவாக்குவார்; ஆனால் மனந்திரும்பாவிட்டால் அவர் கைவிட்டுவிடுவார்.
குயவனின் உவமையானது, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் உரிமையை மட்டுமல்ல, தேவனுடைய இரக்கங்காட்டும் உரிமையையும் விளக்குகிறது. அன்பானவர்களே, தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யாதபடிக்கு நாம் ஜாக்கிரதையாயிருப்போம். அவருக்கு நம்மை முழுவதும் சமர்ப்பித்து, அவர் நம்மை உருவாக்கி, அவர் விரும்புகின்ற பயனுள்ள பாத்திரமாய் நம்மை மாற்றுவதற்கு ஒப்புக்கொடுப்போம்.ஜெபம்: ஆண்டவரே, உமது இரக்கத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் பாவம் செய்தபோது, என்னை நீர் முற்றிலும் எறிந்துவிடாமல், மறுபடியும் சக்கரத்தில் வைத்து வனைகிறீர். உம்மிடம் என்னை சமர்ப்பிக்கிறேன். உமது கிரியையை கெட்டுப்போக்கினேன் என்று அறிக்கையிடுகிறேன். நீர் மறுபடியும் என்னை பயனுள்ள பாத்திரமாய் வனைய தாழ்மையுடன் கேட்கிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments