top of page

வியாழன், செப்டம்பர் 18 || தேவனே, என் வீட்டை நானே இடித்துப்போடக்கூடாது!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Sep 18
  • 1 min read


புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.  - நீதிமொழிகள் 14:1


நீதிமொழிகள் 31ல் கூறப்பட்டுள்ள குணசாலியைப்போல இல்லாத பல பெண்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். உதாரணத்துக்கு ஏவாளை எடுத்துக்கொள்ளுங்கள். அவளைத் தேவன் ஆதாமுக்கு துணையாக இருக்கும்படி உருவாக்கினார். ஆனால் அவளோ அவனைச் சோதனைக்குள் தள்ளுபவளாக மாறிப்போனாள். சாத்தான் அவளைச் சோதித்தான். அவள் பாவத்தில் விழுந்துபோனது மட்டுமல்லாது ஆதாமையும் அதே பாவத்தில் விழப்பண்ணினாள். போத்திபாரின் மனைவியை எடுத்துக்கொண்டால், மற்றொருவனின் மனைவியாயிருந்தும், இச்சகம் பேசும் ஸ்திரீயாக யோசேப்பை வசீகரம் பண்ண முயற்சித்தாள். (ஆதியாகமம் 39) யேசபேல் துன்மார்க்கத்தால் தன் கணவனாகிய, இஸ்ரவேலின் ராஜா ஆகாபை, பாகால் விக்கிரகத்தை ஆராதிக்கத் தூண்டியவள்; யோபின் மனைவி தன் விசுவாசத்தில் குறைவுபட்டவளாக இருந்தவள். ஒரு காலத்தில் அவள் பக்தியுள்ளவளாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால், தன் கணவனின் துன்பநாட்களில் அவனை உற்சாகப்படுத்தத் தவறியதோடு, இன்னுமா உம் உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீர். தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்று சொன்னவளல்லவா? (யோபு 2:9) இவர்கள் மட்டுமல்ல, தாவீதின் மனைவி மீகாள், அனனியாவின் மனைவி சப்பீராள் என புத்தியற்ற பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 


அன்பானவர்களே, பெண்களைக் குறைகூற அல்ல, நாம் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்காக எச்சரிப்பாய் இவை எழுதப்பட்டிருக்கின்றன. நாம் படித்தவர்களாக, உயர் பதவியில் இருப்பவர்களாக, செல்வச் சீமாட்டிகளாக இருந்தால் மட்டும் போதாது, குணசாலிகளாகவும் இருக்கவேண்டியதும் அவசியம். குடும்பத்தைக்  கட்டுபவர்களாக நாம் இருக்கவேண்டுமே தவிர இடித்துப்போடக் கூடாது. நாம் கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீகளாக வாழ்ந்து குடும்பத்தில் சந்தோஷம் பொங்கச்செய்வோம். கர்த்தரை மகிமைப்படுத்துவோம். 

ஜெபம்: கர்த்தாவே, குணமற்ற பல ஸ்திரீகளைப்பற்றி வேதம் கூறுவதைப்படித்து எப்படிப்பட்ட பெண்ணாக வாழக்கூடாது எனத் தெரிந்துகொண்டேன். என் குடும்பத்தை நானே உடைத்துப்போடாமல், இயேசுவை அஸ்திபாரமாகக் கொண்டு அதைக் கட்டிக்காக்க, எனக்கு உமது கிருபையைத் தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page