வியாழன், ஏப்ரல் 24 || விலையேறப்பெற்றதைக் கர்த்தருக்குக் கொடுங்கள்!
- Honey Drops for Every Soul
- Apr 24
- 1 min read
.. நீ .. உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; .. பின்பு .. என்னைப் பின்பற்றிவா என்றார். - மாற்கு 10:21
தேவனிடமிருந்து நாம் பெற்ற ஆசீர்வாதங்களை நம் விருப்பப்படி பயன்படுத்துவதைவிட்டு, தேவசித்தத்திற்குக் கீழ்ப்படுத்தி, எல்லாம் அவருடையது என்றும் நாம் உக்கிராணக்காரர் மாத்திரமே என்றும் நாம் உணரவேண்டும். தான் அதிக காலம் காத்திருந்து பெற்றுக்கொண்ட ஆசீர்வாதமாகிய ஈசாக்கை பலியிடவேண்டிய நிலை வந்தபோதும், பிரியமான மகனை ஆபிரகாம் தயக்கமின்றி ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கை வெட்ட அவன் கத்தியை எடுத்தபோது கர்த்தர் இடைபட்டு, பிள்ளையாண்டான்மேல் உன் கையைப்போடாதே - நீ உன் புத்திரனை எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்று கூறி அவனைத் தடுத்தார். (ஆதியாகமம் 22:12) அவன் தன் சித்தத்தை சாகடித்ததால் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டான். ஈசாக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டான்.
அன்பு நண்பர்களே, நமக்கு மிகவும் பிரியமானதை தேவனுடைய பலிபீடத்தில் வைத்துவிட்டு அவரை நம் ஆண்டவராக ஏற்றுக்கொள்ள நாம் ஆயத்தமா? நாம் எதையாவது செய்துதான் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. ஏனெனில் அது தேவனுடைய மட்டற்ற கிருபையால் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால், அவரது ஐக்கியத்தை நாம் அனுபவிக்கவேண்டுமானால் அவரது கர்த்தத்துவத்திற்கு நாம் கீழ்ப்படியவேண்டும். தன்னை பின்பற்ற விரும்புபவர்களுக்கு ஆண்டவர் இயேசு அதற்கான ஒரு விலைக்கிரயம் கண்டிப்பாக செலுத்தப்படவேண்டும் என்பதை சற்றும் தயக்கமின்றி கண்டிப்புடன் கூறினதை நாம் வேதத்தில் பல இடங்களில் வாசிக்கிறோம். இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோம். என் சித்தமல்ல, உம் சித்தமே என் வாழ்வில் நிறைவேறட்டும் என்று கூறி நம்மையும் நம்முடையவைகளையும் அவரிடம் ஒப்படைக்கிறோமா அல்லது ஒதுங்கி ஓட முயல்கிறோமா. சிந்திப்போம், செயல்படுவோம்.
ஜெபம்: தேவனே, நான் பெற்ற எல்லா ஆசீர்வாதங்களும் உம்முடையவைதானே. எனவே, அவற்றைப் பற்றிக்கொண்டு உம்மை விட்டுவிடாதிருக்க எனக்கு கிருபை தாரும். எனக்குப் பிரியமான எதையும் நீர் கேட்கும்போது உமது பலிபீடத்தில் படைக்க நான் ஆயத்தம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentarios