top of page

வியாழன், ஏப்ரல் 17 || என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Apr 17
  • 1 min read

வாசிக்க: மத்தேயு 26: 26-29


எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். - 1 கொரிந்தியர் 11:28



தமது சீஷர்களோடு அனுசரித்த கடைசி பஸ்கா விருந்தில், புளிப்பில்லா அப்பம், பாத்திரம் இரண்டையும் தமது மரணத்துக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார் இயேசு. அப்பம் உலகத்தின் பாவத்துக்காகப் பிட்கப்பட்ட அவரது சரீரத்துக்கு அடையாளம். திராட்சரசம் பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்துக்கு அடையாளம். (மத்தேயு 26:28)  


அன்பானவர்களே, ஆண்டவரது ராப்போஜனத்தை நாம் சரியான முறையில் அனுசரித்தால் அது நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும் கொடுக்கப்படுகின்ற வாய்ப்பாயிருக்கும். இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும்? 

முதலாவது, நாம் பின்னோக்கிப் பார்க்கவேண்டும். (1 கொரிந்தியர் 11: 23-26) அவர் மரணத்தை நாம் நினைவுகூரவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இது சுவிசேஷ செய்தியின் மிக முக்கியமான பகுதி. கிறிஸ்துவானவர் மரித்து ... அடக்கம்பண்ணப்பட்டார் ... (1 கொரிந்தியர் 15:3,4) ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையோ, அவரது போதனைகளோ பாவிகளை இரட்சிக்காது, அவரது மரணமே இரட்சிக்கும். 


இரண்டாவதாக, நாம் முன்னோக்கிப் பார்க்கவேண்டும். கர்த்தர் வருமளவும் நாம் அவரது பந்தியை ஆசரிக்கவேண்டும். இயேசு நமக்காக மரித்தது மட்டுமல்ல, அவர் உயிர்த்தெழுந்து பரத்துக்கு ஏறினார்; ஒருநாள் அவர் திரும்பவும் வந்து பரலோகத்துக்கு நம்மைக் கொண்டுசெல்வார். 


மூன்றாவதாக, நாம் உள்நோக்கிப் பார்க்கவேண்டும். நாம் கர்த்தருடைய பந்தியில் அபாத்திரமாக அல்ல, பாத்திரமாகப் பங்குபெறவேண்டும். அதற்கு நம்முடைய இருதயங்களைச் சோதித்தறிந்து, நம் பாவங்கள் என்ன என்று உணர்ந்து அவற்றை ஆண்டவரிடம் அறிக்கை செய்யவேண்டும். அறிக்கையிடாத பாவங்களுடன் நாம் பந்தியில் பங்குபெற்றால், கிறிஸ்துவின் சரீரம், இரத்தத்தைக்குறித்து குற்றமுள்ளவர்களாக இருப்போம். நம்முடைய பாவங்களே அவரைச் சிலுவையில் அறைந்தன. நாம் பாவங்களை அறிக்கையிடாதிருந்தால் அவர் நம்மைச் சிட்சித்து, நியாயந்தீர்ப்பார். இதை நாம் எளிதாக  எடுத்துக்கொள்ளாமல், நம் பாவத்தை விட்டு மனந்திரும்பி, அவர் மேசைக்கு தேவபயத்துடனும் பக்தியுடனும் வருவோம்.



ஜெபம்:  ஆண்டவரே, நான் உமது மேசையிலிருந்து, அப்பம், திராட்சரசத்தைப் பெறுகையில், உமது மரணத்தை நினைவுகூர்ந்து, உயிர்த்தெழுதலை அறிவிக்க, உம் வருகைக்கு காத்திருக்க உதவும். நீர் கண்டித்து உணர்த்தும் பாவத்திலிருந்து மனந்திரும்பி, பயபக்தியுடன் உமது பந்தியில் பங்கெடுப்பேன். ஆமென். 



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page