வியாழன், அக்டோபர் 30 || உங்கள் விசுவாசத்துக்காகப் பாடுபடத் தயாரா?
- Honey Drops for Every Soul

- Oct 30
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: 1 பேதுரு 4: 12-16
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து.. தேவனை மகிமைப்படுத்தக்கடவன். - 1 பேதுரு 4:16
இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்களை மட்டும் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்களே தவிர அவருக்காகப் பாடுபடுவதற்குத் தயாராயில்லை. பிலிப்பியர் 1:29ல், கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. நாம் அவரோடுகூட பாடுபட்டால்தான் அவரோடுகூட ஆளுகையும் செய்யமுடியும். (2 தீமோத்தேயு 2:12)
நமது ஆண்டவர் இயேசுவின் சகோதரரான யாக்கோபு நீதிமானாக வாழ்ந்தார். முழங்காலில் விழுந்து மக்களது பாவம் மன்னிக்கப்படும்படி அவர் ஜெபிப்பார். இதன் காரணமாக அவரது முழங்கால்கள் ஒட்டகத்தின் முன்னங்கால்களின் முட்டிகளைப்போல் காப்புக் காய்த்து மரத்துப்போயிருந்தன. அவரது பிரசங்கங்களை கேட்கின்ற ஜனங்கள் இயேசுவை பின்பற்றுகிறவர்களாக மாறிவிடுவார்கள் என்று பரிசேயர் அஞ்சியதால், அவரிடம், இயேசுவைப் பின்பற்றவேண்டாம்; அவர் மேசியா அல்ல என்று பஸ்கா பண்டிகைக்கு வரும் யூதர்களிடம் சொல்லும்படி அவரைக் கேட்டுக்கொண்டனர். ஆலயத்தின் உப்பரிகையில் அவரை நிறுத்தி அவரிடம், ஓ நீதிமானே, இந்த மனுஷர் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார்கள். அவர்களோடே பேசும் என்றனர். தேவகுமாரன் இயேசுவைக்குறித்தா பேசச் சொல்லுகிறீர்கள்? அவர் உன்னதமானவருடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் மேகமீதில் அதிசீக்கிரம் வரப்போகிறார் என்று யாக்கோபு கூறியதைக் கேட்டு வெகுண்டுபோன பரிசேயர் மேலே சென்று அங்கிருந்து யாக்கோபைக் கீழே தள்ளிவிட்டனர். ஆனால் அவர் மரித்துப்போகவில்லை. மாறாக, கர்த்தாவே, இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள். இவர்களை மன்னியும் என்று ஜெபித்தார். அவர்களில் ஒருவன் ஒரு உருட்டுக்கட்டையினால் யாக்கோபினுடைய தலையில் அடித்து அவரைக் கொன்றுவிட்டான்.
அன்பானவர்களே, யாக்கோபைப்போல் நாம் ஆண்டவருக்காக வைராக்கியம் பாராட்டுகிறோமா? சற்று யோசிப்போம். விசுவாசத்திற்காகப் பாடுபடவேண்டுமென்பது நமக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பாயிருக்கிறது. நாம் தயாரா? ஜெபம்: பிதாவே, பாடுபட நான் தயாராயில்லை என்பதை வெட்கத்துடன் ஒத்துக்கொள்கிறேன். எனக்கு உமது ஆசீர்வாதம் வேண்டுமென நினைக்கிறேன், ஆனால் பாடுபட நான் விரும்பவில்லை. யாக்கோபைப்போல வைராக்கியத்துடன் உமக்காகப் பாடுபடவும் நான் தயாராக எனக்குக் கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments