top of page

வியாழன், அக்டோபர் 17 வாசிக்க: எரேமியா 44: 1-10

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Oct 17, 2024
  • 2 min read

கர்த்தர் வெறுக்கும் காரியங்கள்!


ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 

- நீதிமொழிகள் 6:16


நம் கர்த்தர் நியாயம், இரக்கம் மற்றும் உண்மையை விரும்புகிற தேவன். ஆனால் அவர் வெறுப்பவையும் உண்டு.

முதலாவது, அவர் விக்கிரக ஆராதனையை வெறுக்கிறார். எரேமியா 44:4,5ல், நான் வெறுக்கிற இந்தக் காரியத்தைச் செய்யாதிருங்களென்று, என் ஊழியக்காரரைக்கொண்டு சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டும் பொல்லாப்பைவிட்டுத் திரும்புவதற்குச் செவியைச் சாய்க்காமல் போனார்கள் என்று கர்த்தர் வருத்தப்படுவதை நாம் வாசிக்கிறோம். உபாகமம் 7:25ல், அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய். அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள் என்று கட்டளையிட்டார். இரண்டாவதாக, கர்த்தர் பெருமையை வெறுக்கிறார். நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, பகைக்கிறேன் என்று ஆமோஸ் 6:8ல், கர்த்தர் கூறுவதை வாசிக்கலாம். இங்கே மேன்மை என்பது பெருமையைக் குறிக்கிறது. நீதிமொழிகள் 8:13ல், பெருமையையும் அகந்தையையும் நான் வெறுக்கிறேன் என்று கூறப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, ஏசாயா 61:8ஐ வாசித்தால், ஆண்டவர் கொள்ளைப்பொருளை - அதாவது திருட்டை - வெறுக்கிறார் என்பது விளங்கும். நான்காவதாக, பிறனுக்கு விரோதமாய் தீங்கு நினைத்து, பொய்யாணை இடுதலும் அவருக்கு அருவருப்பாயிருக்கிறது. (சகரியா 8:17) ஐந்தாவதாக, அவர் பொய் உதடுகளை வெறுக்கிறார். (நீதிமொழிகள் 12:22) ஆறாவதாக, மாறுபாடுள்ள இருதயத்தைக் கர்த்தர் வெறுக்கிறார். (நீதிமொழிகள் 11:20) ஏழாவதாக, அவர் கள்ளத்தராசையும், தவறான எடைக்கற்களையும் அருவருக்கிறார்.


(உபாகமம் 25:14,15) மேலும், மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றமற்ற இரத்தம் சிந்தும் கை, துர் ஆலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்ய விரையும் கால், பொய் சாட்சி, சகோதர விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகியவற்றைக் கர்த்தர் வெறுக்கிறார். (நீதிமொழிகள் 6:16-19)
அன்பானவர்களே, கர்த்தர் வெறுக்கின்ற இதுபோன்ற காரியங்கள் நம்மிடம் இருக்கிறதா? நாம், அவர் வெறுக்கும் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு கர்த்தரின் கோபாக்கினையைத் தூண்டிவிடாமல் வாழ்வோம். 
ஜெபம்: ஆண்டவரே, நான் பொய் சொல்கிறேன். உண்மையற்று செயல்படுகிறேன். மற்றவர்களின்மேல் கசப்பு வைக்கிறேன். உம்மைக்காட்டிலும் மற்றவற்றிற்கு முதலிடம் கொடுக்கிறேன். தயவாய் மன்னியும். இனி அப்படி நடவாமலிருக்க உமது கிருபையையும் வல்லமையையும் தாரும். ஆமென்.


அன்பானவர்களே


இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12  மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து,  இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம்.  நீங்கள் எந்த அரை மணி  நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும்.  நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான, 

சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்



Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page