top of page

பயப்படாதே! கர்த்தர் உன் மேய்ப்பர்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Sep 26, 2024
  • 1 min read

Updated: Sep 28, 2024

செப்டம்பர் 26 வாசிக்க: சங்கீதம் 23


கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்... (சங்கீதம் 23:1)


நம் அனைவருக்கும் பலவிதமான பயம் உள்ளது. சங்கீதம் 23, நம் ஒவ்வொருவருடைய பயத்தை நீக்கி, சமாதானத்தை தரும் ஒரு அற்புதமான சங்கீதம். நமக்கு வறுமையைக் குறித்த பயம் இருந்தால் கர்த்தர் நமது மேய்ப்பராயிருக்கிறார்; நம் தேவைகள் எல்லாவற்றையும் அவர் சந்திக்கிறார் என்பதை நாம் உணர்வோம். நாம் களைப்புடன் இருந்தால் அவர் நம்மைப் புல்லுள்ள இடங்களில் போஷித்து நம் தாகம் தீர்த்து நமக்குப் புத்துணர்ச்சி தருகிறார். புல்லுள்ள இடம் என்பது இளைப்பாறுகிற இடம் மற்றும் பாதுகாப்பான இடம். மேலும் நமது பாதுகாப்பைக்குறித்து நாம் பயப்பட்டால், அவர் நமக்கு முன்பாகச் சென்று நம்மை அமர்ந்த தண்ணீரண்டைக்கு அழைத்துச் செல்கிறார். அமர்ந்த தண்ணீர் என்பது கவலையற்ற மன அமைதியைக் குறிக்கிறது. ஆம்! நம் ஆண்டவர் நம் ஆத்துமாவுக்கு விடுதலை கொடுப்பது மட்டுமல்ல, நமது வழியைத் தவறவிட்டு நாம் பயப்படும்போது, அவர் தமது நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார். மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் நடக்கும் சமயத்தில் தனிமையை உணரும்போது, அவர் நம்மோடு இருந்து நம்மைத் தப்புவித்து பாதுகாக்கிறார். நம் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்து, சத்துருக்கள் மத்தியில் நம்மை உயர்த்துகிறார். நமது ஆத்தும மேய்ப்பர் நம் வாழ்க்கை முழுவதும் நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்படி செய்கிறார். மேலும் நமக்கு அவர் இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் தருகிறார். நாம் கர்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்து இருப்போம்.


பிரியமானவர்களே, பின்னே ஏன் நாம் பயப்படவேண்டும்? நல்ல மேய்ப்பராம் நம் கர்த்தரை மகிழ்வுடன் பின்தொடர்ந்து, நம்மை முழுவதுமாக அவருக்கு அர்ப்பணிப்போம்.


ஜெபம்: அன்பான தேவனே, எனது வாழ்வின் சில பகுதிகளில் நான் இன்னும் உமது ஆளுகைக்குட்படவில்லை. இன்று என்னை முழுவதுமாக உமது கைகளில் ஒப்படைக்கிறேன். உமது ஆளுகை, அன்பு, கரிசனை, பாதுகாப்புக்குள் வைத்து என் வாழ்வில் மகிழ்ச்சியை நான் அனுபவிக்க கிருபை தாரும். ஆமென்.





Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page