top of page

புதன், ஜூலை 09 || எதையும் எந்நேரமும் தலைகீழாய் மாற்ற தேவனால் முடியும்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jul 9
  • 1 min read

வாசிக்க: எஸ்தர் 7: 1-10


அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்...   - எஸ்தர் 8:1


ஆமானின் வீட்டை எஸ்தரும், அவனது அதிகாரத்தை மொர்தெகாயும் பெற்றுக்கொண்டனர். இந்த இரண்டு வெகுமதிகளுமே அகாஸ்வேரு ராஜாவால்  கொடுக்கப்பட்டது! இதே ராஜாதான் சில நாட்களுக்கு முன்பு ஆமானை உயர்த்தி வைத்தான். (எஸ்தர் 3:1) அவனோடு சேர்ந்து யூத வம்சத்தையே அழிக்க ஒத்துக்கொண்டான்! (எஸ்தர் 3:10-11) யூதர்களைக் கொல்ல ஆமானோடு கைகோர்த்தவன், கடைசியில் ஆமானைக் கைவிட்டு, ஆமான் ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் அவனைத் தூக்கிப்போடும்படி கட்டளையிட்டான். அதுமட்டுமல்ல, அதே நாளில் ஆமானுடைய வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தான். எத்தகைய மாறுதல்! யூதர்களை ஆளுகைக்குள் கொண்டுவந்து அவர்களுடைய சொத்துக்களை அபகரிக்க எத்தனித்தவனின் சொத்து முழுவதுமே அவன் அதிகம் வெறுத்த யூதர்களில் ஒருவளான யூதப் பெண்மணிக்கு வந்தது! மேலும், ஒருகாலத்தில் ஆமானின் கரங்களிலிருந்த ராஜாவின் முத்திரை மோதிரத்தை மொர்தெகாயிடம் கொடுத்தான் ராஜா. ராஜாவின் முத்திரை மோதிரம் அதை வைத்திருந்தவருக்கு அதிகாரத்தைத் தருகிறது! இதை நாம் தேவனுடைய முரண்பாடான, தெய்வீக செயல்பாட்டால் ஏற்பட்ட ஒன்றாக நாம் காண்கிறோம். யூதரின் தலைவிதியை முத்திரையிட ஆமானால் பயன்படுத்தப்பட்ட அதே மோதிரம் இப்போது ஒரு யூதருக்கே வழங்கப்பட்டது! 


அன்பானவர்களே, எந்த இருதயத்தையும் - அது ராஜாவின் இருதயமாயிருந்தாலும் - மாற்றுகின்ற ஆற்றல் தேவனுக்கு உண்டு என்கிறது (நீதிமொழிகள் 21:1) உங்கள் வாழ்க்கையைத் துயரப்படுத்துவதே தன் முக்கிய குறிக்கோளாய் வைத்திருக்கும் ஒருவர் உங்களுக்கு இருக்கலாம். அது ஒருவேளை உங்கள் சக ஊழியராயிருக்கலாம், அண்டைவீட்டுக்காரராயிருக்கலாம், அல்லது அப்படிப்பட்டவரை வாழ்க்கைத்துணையாய் நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் இன்று நீங்கள் நினைவுகூரவேண்டிய ஒன்று: கர்த்தரால் உடைக்க முடியாத வலிமைமிக்க சுவர் ஒன்றுமேயில்லை, மென்மையாக்க முடியாத கடினமான சித்தம் ஒன்றுமில்லை என்பதுதான். அகாஸ்வேரு ராஜாவைத் தேவனால் மாற்றக்கூடுமானால், எந்த இருதயத்தையும் அவரால் மாற்றமுடியும், எப்படிப்பட்ட சூழ்நிலையையும் அவரால் மாற்றக்கூடும். ஆமென்

ஜெபம்: ஆண்டவரே, என் வாழ்வில் உமது தெய்வீக கரம் இருக்கிறது என்று நான் உணர உதவும். உம் இறையாண்மையில் சகலத்தையும் நன்றாய் உமது நேரத்தில் செய்வீர், செய்வதெல்லாம் நன்மைக்கே என்பதுதான் உமது நோக்கம் என்று நான் நம்ப உதவும். ஒருவரது இருதயத்தை உம்மால் எந்த நேரத்திலும் மாற்றமுடியும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page