புதன், செப்டம்பர் 10 || என்றும் வற்றாத ஒரு கிணறு
- Honey Drops for Every Soul
- Sep 10
- 1 min read
வாசிக்க: யோவான் 4: 1-26
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் ... - யோவான் 4:14
ஏதோ ஒன்றைக்குறித்த தாகம் நம் எல்லாருக்கும் உண்டு. நம்முடைய சாதனைகள், உறவுகள், உடைமைகள் அல்லது கேளிக்கைகளில் திருப்தியைத் தேடுகிறோம் - ஆனாலும் நாம் எவ்வளவு அருந்தினாலும், இன்னமும் தாகமுள்ளவர்களாகவே இருக்கிறோம். சமாரியப் பெண்ணோடு பேசுகையில் இயேசு அவளிடம் வேறு வித தண்ணீரான ஜீவதண்ணீரைக் குறித்துப் பேசினார். இந்தத் தண்ணீரை உலகத்தால் கொடுக்கமுடியாது. இது ஆவிக்குரியதும் நித்தியமானதுமாய் இருக்கிறது; இது அவர் இருதயத்திலிருந்து நம் இருதயத்துக்கு ஓடி வருகிறது. இந்தத் தண்ணீரைக் குடித்தால் - ஆழமான, நிலையான, அசையாத வாழ்வைப் பெற்றுக்கொள்வோம். இது நம்முடைய முயற்சியால் கிடைப்பதில்லை, இது ஒரு ஈவு - கிறிஸ்துவிடம் வந்தவருக்கு இலவசமாய்க் கொடுக்கப்படுகிற ஈவு. கிறிஸ்துவுக்குள் நாம் இருந்தால் - நாம் திருப்தியைத் தேடி ஓடத் தேவையில்லை. அவர் கொடுக்கின்ற தண்ணீர் வற்றிப்போவதில்லை!
அன்பானவர்களே, கர்த்தரின் கிருபையைத் திருப்தியுடன் நாம் குடிப்போமானால், அது நம்மை உயிர்ப்பிக்கின்ற, தூய்மைப்படுத்துகின்ற, வல்லமைப்படுத்துகின்ற ஊற்று ஒன்றை நமக்குள்ளே காண்போம். சுருங்கச் சொன்னால், குற்றவுணர்வை சுமக்காதபடிக்கு அவர் தருகின்ற பூரண மன்னிப்பைப் பெற்றுக் கொண்டு, நம் பெலவீனத்தை உணரும்போது ஒவ்வொரு நாளும் அவருடைய பெலனில் சார்ந்துகொண்டு, அவரோடுள்ள நெருக்கமான ஐக்கியத்தின் ஐசுவரியத்தை அனுபவித்து, அவரது பிரசன்னமே நம் வாழ்வை உருவாக்கி, தாங்குகிறது என்ற நம்பிக்கையோடு நடப்பதுதான் திருப்தியாகக் குடிப்பது ஆகும்! வறட்சியான காலங்களிலும் அவரே நம் ஆதாரமாயிருக்கிறார். நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள் என்று ஏசாயா 12:3 கூறுகிறது. தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன் என்று மறுபடியும் சொல்லுகிறது ஏசாயா 44:3! காலியான கிணற்றுக்கு நாம் திரும்பவேண்டாம். என்றைக்குமே வற்றிப்போகாத கிணற்றிலிருந்து தினந்தோறும் நாம் மொண்டுகொள்வதை மற்றவர்கள் காண்பார்களாக.
ஜெபம்: கிருபையின் ஆண்டவரே, நான் ஜீவத்தண்ணீரை கிறிஸ்துவிலே காணச் செய்ததற்காய் உமக்கு நன்றி. உமது ஆவியை தினந்தோறும் திருப்தியாய்ப் பருக எங்களுக்குக் கற்றுத் தாரும். ஒன்றுமற்ற காரியங்களுக்குப்பின்னால் ஓடாமல், இலவசமாய்க் கொடுக்கும் உம்மை நம்ப எங்களுக்கு உதவும். உம் இரட்சிப்பின் சந்தோஷத்தினால் எங்கள் இருதயங்கள் நிறைந்து வழிந்தோடட்டும்; எங்கள் வாழ்விலிருந்து உம்முடைய நன்மையை மற்றவர்கள் ருசிக்கட்டும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments