top of page

புதன், ஏப்ரல் 23 || கர்த்தர் பேசுவதைக் கேளுங்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Apr 23
  • 1 min read


இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் ... உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள். - சங்கீதம் 95:8



தம் மக்களோடு பேசுவதற்கு கர்த்தர் பல்வேறு முறைகளைக் கையாளுகிறார். சிறுவன் சாமுவேலோடு பேசுவதற்கு அவர் தேவ ஆலயத்தைத் தெரிந்துகொண்டு அவன் அங்கு உறங்கிக்கொண்டிருக்கையில் அவன் காதுகேட்கப் பேசினார். புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவ விசுவாசிகளைத் துன்புறுத்திக் கொலைசெய்ய சென்றுகொண்டிருந்த சவுலிடம் பகல் நேரத்தில் சாலையிலே பேசினார். இன்றும் கர்த்தர் நம்மோடு வேதப் புத்தகத்தின்மூலம் பேசுகிறார். தமது ஊழியர்கள் மூலமும் அவர் பேசுகிறார். நாம் அவர் சத்தத்திற்குக் கவனமாக செவிசாய்த்து எந்தவித தர்க்கமுமின்றி கீழ்ப்படிவதே உகந்தது! அவர் எவ்வகையில் நம்மோடு பேசினாலும் சரி, அதற்கு உடனே கீழ்ப்படியவேண்டும். அப்போஸ்தலர் 8ம் அதிகாரத்தில் நாம் பிலிப்புவைப்பற்றி வாசிக்கிறோம். கர்த்தர் சமாரியாவில் அவரை வல்லமையாகப் பயன்படுத்திக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென கர்த்தரிடமிருந்து, காசாவுக்குப்போகும் வனாந்திரவழியாக தெற்குநோக்கிப் போகும்படி கட்டளை வந்தது. மறுப்பேதுமின்றி உடனே பிலிப்பு கீழ்ப்படிந்தார். கர்த்தரும் முழு திட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை; எருசலேமிலிருந்து காசாவுக்குப் போகும் வழியில் செல்லப் பணித்தார்; அவ்வளவுதான். அப்படி பிலிப்பு சென்றபோதுதான் எத்தியோப்பிய மந்திரியைக் கண்டார். அப்போது கர்த்தர் மறுபடியும் பேசி, இரதத்தோடு ஓடிச் சேர்ந்துகொள் என்றார். பிலிப்பு கர்த்தரிடம் எந்த கேள்வியும் கேளாமல் இரதத்தோடு ஓடிப்போய்ச் சேர்ந்தார். மந்திரி, ஏசாயா புத்தகத்தை வாசிப்பதைக் கேட்டவுடன் பிலிப்பு தெய்வீக வல்லமையுடன் அவனுக்கு அந்தப் பகுதியை விளக்கி ஒரு ஆத்துமாவைக் கிறிஸ்துவினிடத்தில் திருப்பும் பாக்கியத்தைப் பெற்றார்.  


அன்பானவர்களே, நாமும் கர்த்தரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிகிறவர்களாக இருப்போமானால் அவர் நம்மையும் வல்லமையாகப் பயன்படுத்தி தமது ராஜ்யத்தை நம் மூலமும் கட்டுவார். எனவே, அவர் சொல்கேட்டு அப்படியே செய்வோம்.

ஜெபம்: தகப்பனே, உமது வார்த்தையை உணர்ந்து செவிசாய்க்க எனக்கு உதவி செய்யும். அதற்கு கேள்வியெழுப்பாமல் கீழ்ப்படியவும் கிருபை தாரும். உமது வழிகளைத் தெரிந்துகொண்டு உமது கட்டளையின்படி நடந்து உமது வல்லமையினால் அநேகரை உமது ராஜ்யத்திற்கு கொண்டுவர உதவும். ஆமென். 



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page