புதன், ஏப்ரல் 16 || அநீதியாய் நடத்தப்பட்டால் எப்படி எதிர்கொள்வது
- Honey Drops for Every Soul

- Apr 16
- 1 min read
வாசிக்க: 1 பேதுரு 2: 2-23
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போல ... வாயைத் திறவாதிருந்தார். - ஏசாயா 53:7
மரணத்தை எதிர்கொள்ளும்போதும் கிறிஸ்து தன்னைக் காத்துக்கொள்ள தமது வாயைத் திறவாதிருப்பார் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தமக்கு எதிராய் குற்றஞ்சாட்டினவர்களுக்கு எதிராக இயேசு நிற்கும்போது இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறினது. மத்தேயு 26:63, இயேசுவோ பேசாதிருந்தார் என்று கூறுகிறது. பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை என்று மத்தேயு 27:12 கூறுகிறது. லூக்கா 23:9, யோவான் 19:9 இப்படிக் கூறுகிறது - அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
உபத்திரவத்திலிருந்த முதல் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு, பேதுரு கடிதம் எழுதுகையில், நமது விசுவாசத்திற்காக நாம் தாக்கப்பட்டால், இயேசு வைத்துப்போன மாதிரியைப் போலவே, நாமும் செய்யவேண்டும் என்று கூறுகிறார். (1 பேதுரு 2:21-23) இயேசுவைப் பின்பற்றுகின்ற நாம் குற்றஞ்செய்யாதபோதும் சிலவேளைகளில் அநியாயமாய்ப் பாடுபட நேரிடலாம். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நமக்கு எதிராக மாறி, ஏளனம் செய்யலாம், நம்மை உதறிவிடலாம். நாம் செய்யப்போவது என்ன? நாம் அவமதிக்கப்பட்டால் நம் இயற்கையான செய்கை அவர்களை அவமதிப்பது. ஆனால், இயேசு வேறு சிறந்த வழியை தெரிந்தெடுத்தார். பிலாத்துவின் முன்பும் ஏரோதுவின் முன்பும் அவர் நின்றபோது, கூக்குரலிடும் ஜனக்கூட்டத்தை கண்டபோது இயேசு அவர்களை மிரட்டவுமில்லை, அவமதிக்கவும் இல்லை. அவரை வாரினால் அடித்தபோது, அவர் திரும்ப அடிக்கவில்லை. போர்வீரர் அவரது சிரசில் முள்முடி கிரீடம் சூட்டியபோதும், கரங்கள் கால்களில் ஆணிகள் கடாவினபோதும், அவர்களைச் சபிக்கவில்லை. மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். (ஏசாயா 53:7)
அன்பானவர்களே, விசுவாசப் பரீட்சை உண்மையில் நம் கடினமான காலங்களிலே வருகிறது. நாம் அவமதிக்கப்படும்போது, நாம் திரும்ப அப்படிச் செய்யக் கூடாது; மாறாக, காரியத்தைக் கர்த்தர் கரத்தில் கொடுத்துவிட வேண்டும்; அவரே நீதியாக நியாயத்தீர்ப்பளிப்பார்!
ஜெபம்: ஆண்டவரே, துரோகம் செய்து, அடித்து, அநியாயமாய் தண்டிக்கப்பட்டு, கொடுமையாய் உம்மை சிலுவையிலறைந்தனர். ஆயினும் நீர் அவர்களைச் சபிக்கவில்லை, தண்டிக்கவும் இல்லை. உமது மாதிரியை நானும் பின்பற்ற உதவும். எதிராய் நின்று தவறாய் நடத்துபவர்களை மன்னிக்க கிருபை தாரும். ஆமென். தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments