புதன், அக்டோபர் 23 வாசிக்க: மத்தேயு 18: 1-6
- Honey Drops for Every Soul

- Oct 23, 2024
- 2 min read
குழந்தையைப்போன்ற விசுவாசம் தேவை!
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்... - மத்தேயு 18:3
சிறுகுழந்தையைப்போன்ற விசுவாசத்தோடு அவரிடம் நாம் வருவதை நம் ஆண்டவர் விரும்புகிறார். எதையுமே முதலில் சோதித்துப்பார்த்து பிறகு அதை ஏற்றுக்கொள்வதென்பது குழந்தைகளின் வழக்கமல்ல. எதையும் உடனே அவர்கள் நம்பிவிடுவார்கள். அவர் எப்படிப்பட்டவரோ என அவரையும், அவரது வார்த்தையையும், அவரது அற்புதங்களையும் சோதித்தறிந்தபிறகு, ஆண்டவரை ஏற்றுக்கொள்ள எத்தனிப்பதாலேயே அநேகரால் அவரை விசுவாசிக்க முடியாமல் போகிறது. தன் தகப்பன் வீட்டையும் தன் இனத்தாரையும் விட்டு தான் காண்பிக்கும் தேசத்துக்குப் போக ஒரு தொலைதூரப் பயணத்தை மேற்கோள்ள அழைக்கப்பட்ட ஆபிரகாம், உடனே கீழ்ப்படிந்தான். ஆண்டவரது சத்தத்தையோ அல்லது அவரது

திட்டத்தையோ அவன் சோதித்துக்-கொண்டிருக்கவில்லை. தானியேல் தான் பாபிலோன் தேசத்திற்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்டபோது ஆண்டவரது அன்பையோ அவரது கரிசனையையோ குறித்து வினா எழுப்பாமல் அங்கும் அவருக்கு கீழ்ப்படிந்தான். தாவீது, சவுலால் பலமுறை தொடர்ச்சியாய் துன்பப்படுத்தப்பட்டபோதும் ஆண்டவருக்கு எதிராக முறுமுறுக்கவோ, கேள்வி கேட்கவோ செய்யாமல் அவர் தன்னை சவுலின் கைக்குத் தப்புவிப்பார் என்று முழு நிச்சயமாய் அவரை நம்பினான். யோசுவா, யோர்தானைச் சந்தித்தபோதும், எரிகோ எதிரே நின்றபோதும், தன் சுய அறிவை உபயோகிக்காமல், ஆண்டவர் சொல்வது சரிதானா என்று யோசிக்காமல், முன்னேறிச்சென்றான். வெற்றி கண்டான்.
அன்பானவர்களே, ஆண்டவரது திட்டம் மற்றும் செயல்பாட்டைக்குறித்தும், அவரது வழிகள் மற்றும் வாக்குத்தத்தங்களைக் குறித்தும் கேள்வி எழுப்புகிறீர்களா? அல்லது குழந்தையைப்போன்ற விசுவாசத்தோடு அவரைச் சார்ந்துகொள்கிறீர்களா? ஆண்டவரைச் சோதித்தறிந்த பிறகுதான் விசுவாசிப்பேன் என்று கூறாமல், சூழ்நிலைகள் எதிர்மறையாக இருந்தாலும் ஆண்டவர் அவை எல்லாவற்றையும் மாற்றி எனக்கு வெற்றியைத் தருவார் என்று விசுவாசித்து, அவரது கரங்களை உறுதியாய்ப்பற்றிக்கொண்டு முன்செல்லுங்கள்; அவர் வெற்றி தருவார்.ஜெபம்: தகப்பனே, எனது சூழ்நிலைகள் நம்பிக்கையற்றுத் தோன்றினாலும், உம்மைப் பற்றிக்கொண்டு, உமது வாக்குத்தத்தங்களை சுதந்தரித்து, சந்தேகப்படாமல் முன்செல்ல எனக்கு உதவி செய்யும். ஒரு குழந்தையைப்போல உம்மை உறுதியாய் நம்பி வெற்றிபெற உதவிடும். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments