நாம் தேவனுடைய ஆலயம்!
- Honey Drops for Every Soul
- Sep 28, 2024
- 1 min read
Updated: Sep 28, 2024
செப்டம்பர் 28 வாசிக்க: 1 கொரிந்தியர் 6:12-20
இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
(யோவான் 10:23)
உடல்நலக்குறைவுடன் வயோதிபர் ஒருவர் கிறிஸ்துமஸ் ஆராதனையில் கலந்துகொள்ள ஆலயத்துக்குச் சென்றார். கூட்டம் அதிகமாயிருந்ததால் அவரால் உள்ளே செல்லமுடியவில்லை. வருத்தமடைந்த அவர் வெளியே வந்து ஒரு மரத்தினடியில் உட்கார்ந்தார். ஏமாற்றத்துடன், நான் இன்னுமொரு கிறிஸ்துமஸைக் காண்பேனோ மாட்டேனோ தெரியவில்லை. எனக்கு வயதாகிவிட்டது; பலவீனமாகவும் இருக்கிறேன். எனக்கு ஏன் இப்படி நேரவேண்டும் ஆண்டவரே என்று நினைத்து கண்ணீர் விட்டார். அப்போது ஒரு கரம் அவரைத் தொட்டது. மேலும் ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் என்று மெல்லிய குரலில் பேசிய இயேசுவின் சத்தத்தைக் கேட்டார்; அவர்: ஆடம்பரமும், பகட்டும், உலக மேன்மையும்தான் உள்ளே காணப்படுகிறதே தவிர, எனக்கே அங்கு இடமில்லை. ஆனால் நீ என்னைச் சந்திக்க மிகுந்த ஆவலுள்ளவனாக இருக்கிறாய்; எனவேதான் இங்கு வந்தேன் என்று கூறினார். பிறகு தம் கரத்தை அவர்மேல் வைத்து அவரை ஆசீர்வதித்தார்.
பிரியமானவர்களே, இயேசுவை நம் முழு இருதயத்தோடு தேடினால் அவரை நாம் கண்டடைவோம். 1 கொரிந்தியர் 6:15ல், நமது சரீரம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருப்பதால் சரீர இச்சைகளை விட்டு நாம் ஓட வேண்டும் என பவுல் வலியுறுத்துகிறார். நமது சரீரத்தாலும் நாம் தேவனை மகிமைப்படுத்தவேண்டும் என அவர் கூறுகிறார். எனவே, நாம் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு நம்மை சுத்திகரித்துக்கொள்வோம். மேலும், தேவன் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான ஆவியை விரும்புகிறார் என்று சங்கீதம் 51:17 கூறுகிறது. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறார் என்று 1 பேதுரு 5:5 கூறுகிறது. எனவே, நாம் பரிசுத்தத்துடனும், தாழ்மையுடனும் இருந்து நமது இருதயத்தை இயேசுவுக்குத் திறந்து தருவோம். ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.
ஜெபம்: தேவனே, மகிமையை உமக்குக் கொடுக்காமல் உலகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களிடம் வாசம் செய்யாமல், தாழ்மையுள்ளவர்களின் இதயத்தில் வாசம் செய்ய விரும்புகிறீர். நான் தாழ்மையுடனிருந்து பரிசுத்தனாய் உம்மை மகிமைப்படுத்த உதவும். ஆமென்.
Comments