top of page

திங்கள், ஜூலை 14 || மன்னிக்கமனமில்லாமை நமக்கு ஒரு சிறை!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jul 14
  • 1 min read


... தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், .. பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.

- மத்தேயு 18:35


தன் ராஜாவிடம் பத்தாயிரம் தாலந்து என்ற மிகப்பெரிய தொகையைக் கடன்பட்டிருந்த ஒரு வேலைக்காரன் இருந்தான்.  எனவே, அவனுக்குண்டான எல்லாவற்றையும் விற்று அந்தக் கடனைச் செலுத்தித் தீர்க்கும்படி ராஜா கட்டளையிட்டான். ஆனால், தனக்கு கால அவகாசம் தரும்படியாகவும், எப்படியாவது கடனைச் செலுத்திவிடுவதாகவும் அவனை அந்த வேலைக்காரன்  வருந்திக்கேட்டுக்கொண்டான். அவனுக்கு உண்மையில் திராணியில்லை என்பதை உணர்ந்துகொண்டு, அவனது கடன்தொகை முழுவதையும் மன்னித்துவிட்டான் அந்த ராஜா. இது ராஜாவின் இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்தியது. ஆனால் அந்த வேலைக்காரனோ தன்னிடம் மிகச்சிறிய அளவு கடன்பட்டிருந்த மற்றொரு உடன்வேலைக்காரனை துன்புறுத்தி, கடனைத் திருப்பிக்கொடுக்காததினிமித்தம் அவனைக் கடிந்துகொண்டு, அதை உடனே செலுத்திவிடும்படி நெருக்கினான். அந்த உடன் வேலையாள்      அவனை வருந்திக்கேட்டுக்கொண்டும், அவனை மன்னிக்க மறுத்து, அதைத் திரும்பக்கொடுக்குமளவும் அவனைச் சிறைக்குள் தள்ளினான். இதைக் கேள்விப்பட்ட ராஜா அதிகக் கோபமுற்றான். ராஜா, வேலைக்காரனிடம், பொல்லாத ஊழியக்காரனே, நான் உனக்கு இரங்கினதுபோல நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, கடனையெல்லாம் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 


அன்பானவர்களே, மன்னிக்கவிரும்பாத இதயமே உலகத்திலேயே மிகமோசமான சிறையாகும் என வாரன் வியர்ஸ்பீ கூறுகிறார். அதாவது, மற்றவர்களை நாம் மன்னியாமல் போனால் நம்மை நாமே சிறைப்படுத்திக்கொள்பவர்களாக இருப்போம். நம்மை நாமே சித்திரவதை செய்துகொள்பவர்களாகவும் மாறிவிடுவோம். நமது பரமபிதா எவ்வளவு கிருபையுடன் நமக்கு இரங்கி நமது பாவங்களை மன்னித்திருக்கிறார்! அப்படியிருக்க, நமக்கு விரோதமாக பாவம் செய்த மக்களை நாம் மன்னிக்கவேண்டாமா? 

ஜெபம்: தேவனே, நீர் கிருபையாக எனக்கு இரங்கி என் பாவங்களை மன்னித்திருக்க, நான் எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களை மன்னிக்க மனதில்லாமல் அவர்கள்மேல் விரோதம் பாராட்டுகிறேன். என்னை மன்னியும். உள்ளார்ந்த மனதோடு அவர்களை மன்னிக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page