top of page

திங்கள், ஜூன் 30 || நம்மை உயர்த்தாமல் கர்த்தரை உயர்த்துவோம்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • 5 days ago
  • 1 min read


இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, .. நான் கட்டின மகா பாபிலோன்.  - தானியேல் 4:30


தன் சொப்பனத்திற்கு அர்த்தம் தெரிந்தபின்னரும் நேபுகாத்நேச்சார் தன்னைப் பற்றி மிகவும் உயர்வாக எண்ணி, அகந்தையுடன் நடந்துகொண்டான். அவனது இறுமாப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த கர்த்தர், தானே பிரபஞ்சம் முழுவதற்கும் ஆண்டவர் என்று அவனுக்கு உணர்த்த மறுபடியும் ஒரு சொப்பனத்தை அவனுக்குக் காண்பித்தார். அதில், ஒரு உயரமான விருட்சத்தையும், நேர்த்தியான அதன் இலைகளையும் கனிகளையும், அதன் கொப்புகளில் தாபரித்த ஆகாயத்துப் பட்சிகளையும் கண்டான். அப்போது ஒரு தூதன் தோன்றி இந்த விருட்சத்தை வெட்டி இதன் கொப்புகளைத் தரித்துப் போடுங்கள் என்று கூறிய சத்தத்தையும் கேட்டான். இரும்பும் வெண்கலமான விலங்கு தரிக்கப்பட்டு, ஆகாயத்துப்பனியிலே நனையவும், மிருகங்களோடு சஞ்சரித்து, காலங்கள் கடந்தபின் மறுபடியும் ராஜ்யபாரத்துக்கு திரும்பவேண்டும் என்றும் சொன்ன சத்தத்தைக் கேட்டான். அந்த சொப்பனம் கர்த்தர் அவனுக்குக் கொடுக்கும் தீர்ப்பே என்றும், ராஜா மனுஷர் மத்தியிலிருந்து தள்ளப்பட்டு, வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பான் எனவும், ஆகாயத்துப்பனியில் நனைவான் எனவும், சிலகாலம் சென்றபின்பு, அவன் பரம அதிகாரத்தை அறிந்தபின்னர் மறுபடியும் அவனது ராஜ்யபாரம் திரும்பும் எனவும் அறிவித்தான் தானியேல். இவ்வளவு எச்சரிக்கப்பட்டும், ராஜா மனமேட்டிமையாக நடந்தான். அவன் மனந்திரும்ப பன்னிரண்டு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டும் அவன் உணரவில்லை. அரமனை உப்பரிகையில் உலாவிக்கொண்டிருந்தபோது அவன் தனக்குத்தானே பேசிக்கொண்ட பெருமை வார்த்தைகள் அவன் வாயிலிருந்தபோதே அவன் தள்ளப்பட்டு, மாட்டைப்போலப் புல்லைத் தின்றான் என்று நாம் வாசிக்கிறோம். ஆனாலும் ஏழு காலங்கள் கடந்தபின், அவன் கர்த்தருடைய ராஜரீகத்தை அறிந்து அறிக்கைசெய்தபோது அவன் புத்தி அவனுக்கு திரும்ப வந்தது.  


அன்பானவர்களே, பெருமை நம்மைத் தேவனைவிட்டுத் தூரமாக்கிவிடுகிறது. எனவே, நமது இருதயத்திற்குள் இந்தப் பெருமை நுழைய நாம் சற்றும் இடம் தரக்கூடாது. நம்மை அவர் தலைவர்களாக வைப்பாரென்றால் நாம் தாழ்மையுடன் நடந்து நம்மிடமுள்ளவர்களை கண்ணியத்துடனும் கனிவுடனும் நடத்துவோம். 

ஜெபம்: தேவனே, உமது வல்லமையைக் கண்டபின்னும் உமது தொடர்ந்த எச்சரிப்பிற்குப் பிறகும் நேபுகாத்நேச்சார் தன்னைத் தாழ்த்தத் தவறியது எத்தனை பரிதாபம். அந்தத் தவறை நான் செய்யாமல், உமது மகத்துவத்தை உயர்த்தி என்னைத் தாழ்த்த எனக்கு உம் கிருபையைத் தாரும். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page