திங்கள், ஜூன் 16 || நமது மதிப்பை நாம் உணர்ந்திருக்கிறோமோ?
- Honey Drops for Every Soul

- Jun 16
- 1 min read
வாசிக்க: 1 பேதுரு 2: 1-10
.. அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். - லூக்கா 12:7
ஒருவன் எவ்வளவுதான் மதிப்பற்ற நிலையில் இருந்தாலும், அவன் ஆண்டவர் இயேசுவைச் சந்தித்தபின்னர் அவனுக்கென்று ஒரு தனி மதிப்பு வந்துவிடுகிறது. தமது கரத்தை என்று அவன்மீது அவர் வைக்கிறாரோ, அன்றே அவன் விசேஷித்தவனாகிவிடுகிறான். அவனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிடுகிறது. தேவதூதர்களை அவன் தனக்குப் பணிவிடை ஆவிகளாகப் பெற்றுக்கொள்கிறான். (எபிரெயர் 1:14) உலக மக்களின் ஜனக்கூட்டத்தில் முகம் தெரியாமலிருந்த அவனுக்கு, காற்றில் பறக்கிற பதருக்கு ஒப்பாயிருந்த அவனுக்கு, ஒரு தனி அந்தஸ்து உண்டாகிவிடுகிறது. இதற்கு ஒரே காரணம் கிறிஸ்து அவனைத் தமது ஆடுகளில் ஒன்றாகத் தெரிந்துகொண்டதே!
எனவே, அன்பானவர்களே, நாம் நம்மைக்குறித்தே தாழ்வாய் எடைபோடாமல், முகமில்லாத மனிதனுக்கு ஒரு முகம், பெயரில்லாதவனுக்கு ஒரு பெயர், புகழில்லாத மனிதனுககு தனிப்பெரும் புகழ், இயேசு அவனைப் பிரித்தெடுத்து தனக்கென்று அழைத்துத் தெரிந்துகொள்ளும்போது உண்டாகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் ராஜாதி ராஜாவாகிய, அண்ட சராசரங்களையும் படைத்த சிருஷ்டி கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் என்றும், அவரது பிள்ளைகள் என்றும் உணர்ந்துகொள்ளவேண்டும். ஆண்டவர் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒரு தனிப்பட்ட நோக்கம் வைத்துள்ளார். நாம்தான் அந்த நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. அதற்கு அவர் நம்மை நம்பியிருக்கிறார். எனவே, இந்த சிலாக்கியத்தை ஏற்றுக்கொண்டு, அவரில் தைரியங்கொண்டவர்களாக இருந்து, நமது வாழ்வை மதிப்புடன் வாழ்ந்து மகிழ்ச்சி பெறுவோம். ஜெபம்: தேவனே, சிலர் என்னைக் கீழ்த்தரமாக எண்ணும்போது நான் குறுகிப்போகிறேன். ஆனால் உமது பார்வையில் நான் விசேஷித்தவன் என்று இன்று உணர்த்தப்பட்டேன். என்னை நீர் தெரிந்துகொண்டு என் மூலம் நிறைவேற்ற நினைப்பதை செய்துமுடிக்க என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments