top of page

திங்கள், ஜூன் 09 || நாம் கொடுப்பதை அவர் கவனிக்கிறார்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 9
  • 1 min read


கர்த்தருக்கு... மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள். - சங்கீதம் 96:8


நாம் தேவனுக்குச் செலுத்துவதை அவர் கவனித்துப் பார்க்கிறார் என்பதையும் அவற்றை அவர் கணக்கில் வைத்திருக்கிறார் என்பதையும் நாம் அநேக வேளைகளில் மறந்துபோகிறோம். எண்ணாகமம் 7ம் அதிகாரத்தில், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களின் பெயர்களும் அவர்கள் செலுத்திய காணிக்கைகளின் விபரமும் எழுதியிருக்கிறது. ஒவ்வொரு கோதிரத்தலைவனும் ஒன்றுபோலவே காணிக்கைகளைச் செலுத்தினாலும், அவற்றின் விபரம் திரும்பத் திரும்ப எழுதப்பட்டிருப்பதை வாசிக்கும்போது, அவர்களையும், அவர்களால் செலுத்தப்பட்டதையும் கர்த்தர் பிரத்தியேகமாகக் கவனித்தார் என்பது உறுதிப்படுகிறது. முதல் கோத்திரத் தலைவன் இன்னின்னதைச் செலுத்தினான்; மற்ற அனைவரும் அப்படியே செலுத்தினார்கள் என்று கூறி நிறுத்திவிடாமல், தெளிவாக எல்லாவற்றையும் கூறியிருப்பது, இன்றைக்கும் அவர் நாம் செலுத்துவதைக் கவனிக்கிறார் என்பதை நமக்குத் திருஷ்டாந்தப்படுத்துகிறது. 


மாற்கு 12:41-44ல், நாம் இதற்கொத்த ஒரு நிகழ்வை வாசிக்கிறோம். தேவாலயத்தில் இயேசு ஒரு நாள், காணிக்கைப் பெட்டி இருந்த இடத்திற்கு எதிரே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராக வந்து அந்தப் பெட்டியில் தங்கள் காணிக்கைகளைப் போட்டார்கள். செல்வந்தர்கள் அதிகமான பணத்தைக் கொண்டுவந்து போட்டார்கள். ஆனால் ஒரு  ஏழை விதவை தன்னிடமிருந்த இரண்டு காசுகளையும் அந்தப் பெட்டியில் போடுவதை அவரது கண்கள் கவனித்துப் பார்த்தன. அவள் செய்த காரியம் அவரது மனதைத் தொட்டது! தனக்குள்ள எல்லாவற்றையும் அவள் போட்டுவிட்டதைக் கண்ணுற்ற அவர் தமது சீஷர்களிடம், எல்லாரைக் காட்டிலும் மிகக் குறைவாய் அவள் கொடுத்திருந்தாலும் அதுவே மிக அதிகமானதாய் எண்ணப்படும் என்று கூறினார்.


அன்பானவர்களே, இந்தக் காரியங்கள் எதைக் குறிக்கின்றன? முதலாவது, கர்த்தர் நம்மை நேசிக்கிறார். நம்மைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார். இரண்டாவது, நாம் கொடுப்பதின் உண்மையான மதிப்பை அவர் கணிக்கிறார். அவருக்கு நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைவிட நமக்கென்று எவ்வளவு வைத்துக்கொள்கிறோம் என்பதையே அவர் கவனிக்கிறார் என்று ஒரு பக்தன் கூறினார். இன்று நாம் எப்படிக் கொடுக்கிறோம்? அவர் கவனிக்கிறார் என்பதற்காக அல்ல, நாம் அவரை நேசிக்கிறோம் என்று காண்பிப்பதற்காகவே நாம் மனப்பூர்வமாகக் கொடுப்போம்.  

 

ஜெபம்: பிதாவே,  நீர் என்னைப் பெயரிட்டு அழைத்து அறிந்திருக்கிறீர். நான் உமக்குக் கொடுப்பவைகளை நீர் கவனித்துப் பார்த்து கணக்கில் வைக்கிறீர் என அறிந்தேன். கொடுக்கவேண்டுமே என்பதற்காக கொடுக்காமல், உம்மை நான் நேசிப்பதால் உதாரத்துவமாகக் கொடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்..



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page