திங்கள், ஜூன் 02 || பஸ்கா ஆட்டுக்குட்டியே, என் பிள்ளையை மீட்டுக்கொள்ளும்!
- Honey Drops for Every Soul

- Jun 2
- 1 min read
வாசிக்க: ஏசாயா 8:18; யோவான் 1:12
என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. - 3 யோவான் 4
இஸ்ரவேலில், தலைப்பிள்ளைகள் மிகவும் விசேஷித்தவர்களாகக் கருதப்படுவதற்கு காரணம், இஸ்ரவேல் கர்த்தருக்கு முதற்பேறானவன் என்று யாத்திராகமம் 4:22லும், ஓசியா 11:1லும் வாசிக்கிறோம். இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணருவதற்கு முன்பாக எகிப்தியரின்மேல் பத்து வாதைகளை வரப்பண்ணினார் கர்த்தர். அவற்றுள் கடைசி வாதை மிகவும் பயங்கரமானதாயிருந்தது. ஒரு குறிப்பிட்ட நாளின் இரவுவேளையில், எகிப்தின் மிருகங்களின் தலையீற்றுகளும், மனுஷருடைய தலையீற்றுகளும் மரணத்தைச் சந்திக்க நேர்ந்தது. எகிப்து முழுவதுமாக மரண ஓலத்தால் நிறைந்தது. இந்த நிகழ்வானது, வருடத்திற்கு ஒருமுறை மட்டுமல்ல, ஒவ்வொருமுறை தலைச்சன் பிள்ளை ஆணாகப் பிறக்கும் சமயத்திலெல்லாம் இந்த நிகழ்வு நினைவுகூரப்படுகிறது.(யாத்திராகமம் 13:1-6) கர்த்தர் இப்படி இஸ்ரவேலின் தலையீற்றையெல்லாம் காத்துக்கொண்டதினிமித்தம், தலையீற்றெல்லாம் கர்த்தருக்கே உரியதாயிருக்கிறது. எனவே அந்த ஆண்பிள்ளை மீட்டுக்கொள்ளப்படவேண்டும் என்று விளக்கப்படுகிறது. அப்படி மீட்டுக்கொள்வதற்காக பிள்ளையின் பெற்றோர் ஒரு வயதான ஆட்டுக்குட்டியையாவது, இரண்டு புறாக் குஞ்சுகளையாவது காணிக்கையாக செலுத்துவார்கள் என்று கூறுகிறது. (லேவியராகமம் 12: 6-8)
அன்பானவர்களே, முதற்பேறெல்லாம் கர்த்தருடையது என்று சொல்லப்பட்டிருந்தாலும், நமது பிள்ளைகள் எல்லோரையும் அவருக்கென்று ஒப்புக்கொடுப்போம். இவர்கள் எல்லோரையும் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் பரிசுத்தமாக்கி, மீட்டுக்கொள்ளவேண்டும் என்று ஜெபிப்போம். அவர்களை அவருக்குச் சொந்தமாக்குவோம். அவரே அவர்களின் மீட்பர்!
ஜெபம்: தேவனே, குடும்பத்தில் மூத்த பிள்ளை உமக்குரியது என்று வேதம் கூறுகிறது. ஆயினும் எனது எல்லா பிள்ளைகளையும் நீர் நேசிக்கிறீர் என்றும், அவர்களை மீட்டுக்கொள்ள நீர் வல்லவர் என்றும் அறிந்து, அவர்களை உம்மிடத்தில் கொண்டுவருகிறேன். அவர்களை மீட்டுக் கொள்ளும். ஆமென்.தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments