திங்கள், செப்டம்பர் 22 || பாவம் பயங்கரமானது! அதை உடனே அகற்றவேண்டும்!
- Honey Drops for Every Soul

- Sep 22
- 1 min read
வாசிக்க: சங்கீதம் 51: 1,2
அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள். - 1 கொரிந்தியர் 6:9
இன்றைய உலகம் பாவத்தைக் கண்டுகொள்வதில்லை. மக்களும்கூட தாங்கள் பாவம் செய்கிறதை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. தாவீது சங்கீதம் 51:5ல், நாம் அனைவருமே பிறப்பிலேயே பாவிகளாயிருக்கிறோம், தாயின் கர்ப்பத்திலேயே பாவம் நமக்குள் குடிகொண்டுவிடுகிறது என்று கூறுவதை நாம் வாசிக்கிறோம். ரோமர் 3:23, எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானோம் என்று உறுதிப்படுத்துகிறது. உலகிலுள்ள எவரும் தான் பாவியில்லை என்று கூறமுடியாது. பாவம் முதலாவது நமது எண்ணத்தில் தோன்றி, உள்ளத்தைக் கறைப்படுத்தி, பிறகு தீமையைச் செய்யவைக்கிறது. கர்த்தரிடமிருந்து நம்மை நித்தியநித்தியமாக அது பிரித்துவிடுகிறது.
அன்பானவர்களே, இந்தப் பாவத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது நம்மை ஒன்றும் செய்யாது என்று நினைப்பது தவறு. தான் பத்சேபாளிடத்தில் செய்த பாவத்தைக்குறித்து உணர்த்தப்பட்ட தாவீது செய்ததைப் பாருங்கள். அவன் பராக்கிரமமுள்ள ராஜாவாக இருந்தபோதும், தன்னை ஆண்டவர் முன்பாகத் தாழ்த்தி, தன் பாவத்தை அறிக்கையிட்டு, அவரிடம் மன்னிப்பைக் கோரியதை நாம் 51ம் சங்கீதத்தில் வாசிக்கிறோம். ரோமர் 6:23, பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறுகிறது. ஆம்! பாவம் செய்கின்ற யாவரும் மரணத்துக்குப் பாத்திரர். அதற்கு யாரும் விலக்கல்ல. பாவிக்கு ஆக்கினைத்தீர்ப்பு நிச்சயமாய் உண்டு. பாவத்தின் விளைவு கொடியது. இன்றே நாம் பாவத்தைவிட்டுத் திரும்புவோம். இயேசுவின் இரத்தம் ஒன்று மட்டுமே நம்முடைய பாவத்தைக் கழுவமுடியும். நாம் அவரிடத்தில் வந்து, அவர் தருகின்ற புதுவாழ்வைப் பெற்றுக்கொள்வோம். ஜெபம்: பிதாவே, பரிசுத்த வாழ்வைக்குறித்த எண்ணம் ஏதுமின்றி பாவத்தைத் தண்ணீர்போல பருகினேன். ஆக்கினைக்குள்ளாக என்னைத் தீர்க்காதிரும், கிருபையாக என்னை மன்னியும். இயேசுவின் இரத்தத்தால் என்னைக் கழுவி, சுத்தமாக்கி, உம்முடைய பிள்ளையாக பரிசுத்தமாய் நான் வாழ உமது கிருபையை எனக்கு அதிகமாகத் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments