திங்கள், செப்டம்பர் 15 || விலைக்கிரயத்தை எண்ணிப் பார்ப்பது
- Honey Drops for Every Soul
- Sep 15
- 1 min read
வாசிக்க: லூக்கா 14: 25-33
உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து... அதைக் கட்டித் தீர்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?- லூக்கா 14:28,30
இயேசுவை பின்பற்றுவது என்பது நாம் எடுக்கின்ற மிகப் பெரிய முடிவு. ஆனால் அதை நாம் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆண்டவர்தாமே தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு விலைக்கிரயத்தை எண்ணிப்பார்க்க வேண்டுமென கூறினார். உண்மை சீஷத்துவம் அறைகுறையான ஒப்பந்தம் அல்ல; அது முழுமனதுடன் கூடிய ஒப்படைப்பு. கிறிஸ்துவுக்கு நாம் கீழ்ப்படிவதைத் தடுக்கும் எந்தக் காரியமாக இருந்தாலும் - நம் உடமைகளோ, உபயோகமானவைகளோ, நமது உறவுகளோ, எதுவாக இருந்தாலும் அவற்றை விட்டுவிடத் தயாராக இருப்பதே அது. பெரும்பாலும் மிகக் குறைந்த எதிர்ப்பையே விரும்புகிற நம் கலாச்சாரத்தில், தியாகத்தின் நடைபாதை வழியாகத்தான் நாம் மகிமையை அடையமுடியும் என்பதை ஆழமாக நினைவுபடுத்துகின்றன இயேசுவின் வார்த்தைகள். எனவே, நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, எதை நான் இழக்கவேண்டும் என்பதே அன்றி, எதை நான் வைத்துக்கொள்ளலாம் என்பது அல்ல!
அன்பானவர்களே, விலைக்கிரயத்தை எண்ணினால் நம் மகிழ்ச்சியை இழந்துவிடுவோம் என்பதல்ல, மாறாக நித்தியத்துக்கானவற்றை ஆதாயமாகப் பெறுவோம். குறுகலான வழியே கர்த்தருடைய பிரசன்னத்திற்கு நடத்தும் என்றறிந்து அதைத் தெரிந்துகொள்ள நாம் முன்வருவதே விலைக்கிரயம். எனவே, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்பதை அறிந்து பவுலைப்போல தொடர்ந்து முன்செல்வோம் நாம். (2 கொரிந்தியர் 4:17) இன்று நம் இருதயங்களை சோதித்து அறிவோம். முற்றிலும் கீழ்ப்படிவதற்குரிய விலைக்கிரயத்தை செலுத்த நாம் தயாராயிருக்கிறோமா? முழு அர்ப்பணிப்புக்குத் தடையாக நமது சௌகரியங்கள், பழக்கவழக்கங்கள், அல்லது பற்றுதல்கள் தடையாக இருக்கின்றனவா? அப்படியென்றால் அவற்றை நாம் கிறிஸ்துவின் கரங்களில் விட்டுவிடுவோம். அவருக்காக நாம் விட்டுவிடும் எதையுமே நாம் இழப்பதில்லை. நாம் செலுத்தும் கிரயம், நமக்குக் கிடைக்கும் பலனைவிட பன்மடங்கு அதிகமானது. அவருடைய பிரசன்னமோ நாம் விட்டுவிடும் எதைக் காட்டிலும் மிகவும் விலையேறப்பெற்றது.
ஜெபம்: ஆண்டவரே, முழு இருதயத்துடன் உமக்குப் பின்செல்ல எனக்குக் கற்றுத்தாரும். நித்திய மகிழ்ச்சிக்கு நடத்தும் குறுகலான பாதையைத் தெரிந்தெடுக்க உம் கிருபையைத் தாரும். தற்காலத்து சௌகரியங்களைவிட நித்தியமான பொக்கிஷங்களை மதிக்க, கீழ்ப்படிதலுக்கான விலைக்கிரயத்தை மகிழ்ச்சியுடன் செலுத்த எனக்கு உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments