top of page

திங்கள், ஏப்ரல் 28|| சுவிசேஷத்தைக்குறித்து வெட்கப்பட வேண்டாம்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Apr 28
  • 1 min read


கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன் ... இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. - ரோமர் 1:16



அவமானம் என்ற சொல்லுக்கு தர்மசங்கடம், குற்றவுணர்வு, வெட்கக்கேடு, அல்லது ஒரு சொல் செயலைக்குறித்த வெறுப்பு என்று அர்த்தம் கூறலாம். ரோமர் 1:16ல் பவுல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் ஒருபோதும் வெட்கமடையமாட்டேன் என்று உறுதியாகக் கூறுகிறார். அப்படியானால் அவர் எந்நாளும் தன் சுவிசேஷ ஊழியத்தில் வெற்றியைத்தான் கண்டாரா? எப்போதுமே தன் முயற்சிக்கான பலன் அவருக்கு முழுமையாகக் கிடைத்ததா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். அவர் மெத்தப் படித்தவர்; அந்நாட்களில் மிகச் சிறந்த அறிஞரான கமாலியேலின் பாதத்தருகே அமர்ந்து படித்தவர். ஆனாலும் இயேசுவைப் பின்பற்ற அவர் தீர்மானித்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தொடங்கியபோதே அவருக்கு நிந்தையும் அவமானமும் ஆரம்பமாகி வாழ்நாள் முழுவதுமாகத் தொடர்ந்தன. 2 கொரிந்தியர் 11:23-27ல், அவர் சுவிசேஷத்திற்காகப் பட்ட பிரயாசங்கள் அதினால் வந்த பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அடிகள், காவல்கள், மிலாற்றினால் அடிகள், மரண அவதிகள், கல்லெறிகள், கப்பற்சேதங்கள், பிரயாணங்களாலும், கள்ளர்களாலும், சுயஜனங்களாலும், அந்நிய ஜனங்களாலும் வந்த மோசங்கள், பசி, தாகம், குளிர், நிர்வாணம் என அவர் பட்ட பல பாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும்  அவமானத்தை எண்ணாமல் இருப்பதற்கு அவர் கற்றுக்கொண்டார். எப்படி? இயேசு தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல் சிலுவையைச் சகித்து மேன்மையடைந்ததை அவர் எண்ணி பாடு, அவமானத்தை சகித்தார். 


அன்பானவர்களே, இன்று சுவிசேஷத்தின் நிமித்தம் நாம் பாடு அனுபவித்தால், நிந்தை அவமானத்தைச் சுமந்தால், துடைத்துப்போட்ட அழுக்கைப்போல நடத்தப்பட்டால் மகிழ்ந்து களிகூரக் கற்றுக்கொள்வோம். நமக்கு முன் வைத்திருக்கும் ஆனந்த பாக்கியத்தை நினைத்து ஊழியத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுவோம்.   

ஜெபம்: தேவனே, எனது சுவிசேஷ முயற்சியில் ஏற்படும் அவமானங்களை எண்ணாதிருக்க உமது கிருபையைத் தாரும்; இயேசு பட்ட பாடுகள் அவருக்கு நித்திய கனமகிமையைக் கொண்டுவந்ததை தியானித்து, பவுலின் பாடுகளை நினைவுகூர்ந்து, உற்சாகமாய் ஊழியத்தைத் தொடர தைரியம் தாரும்.  ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page