திங்கள், ஆகஸ்ட் 25 || கர்த்தரின் வார்த்தை எழுப்புதலைக் கொண்டுவரும்!
- Honey Drops for Every Soul

- Aug 25
- 1 min read
... உடன்படிக்கைப் புஸ்தகத்தின் வார்த்தைகளை.. வாசித்(து).. கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி(னான்).
- 2 நாளாகமம் 34:30,31
யோசியா ராஜாவானபோது, யூதா முழுவதும் விக்கிரக ஆராதனையில் முழுகிப்போயிருந்தது. அவன் முழு இருதயத்தோடு தேவனைத்தேட ஆரம்பித்து, மேடைகள், தோப்புகள், சுரூபங்கள், விக்கிரகங்களை அகற்றி எருசலேமை சுத்திகரிக்கத்தொடங்கினான். ஆலயத்தைச் சுத்திகரித்தபின் அதைப் பழுதுபார்க்க ஆட்களை அமர்த்தினான். அவர்கள் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது, இல்க்கியா எனும் பிரதான ஆசாரியன் கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை ஆலயத்தில் கண்டெடுத்தான். கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகம் ஆலயத்திலேயே காணாமல்போனது எத்தனை வருத்தத்துக்குரிய காரியம்! யோசியா அதை வாசிக்கச்சொல்லிக் கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான். அவன் மனம் வருந்தியதையே இது காட்டுகிறது. கர்த்தரைத் தேட ஆரம்பித்து பத்து வருடமே ஆகியிருந்த நிலையிலும் அவருடைய வார்த்தையை அவன் மிகவும் மதித்தான். எனவே, தங்களுக்காக கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான். ஜனங்களின் பாவத்தினிமித்தம் கர்த்தர் தேசத்தின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேன் என்று சொல்வதாக தீர்க்கதரிசியான உல்த்தாள் கூறியதைத் கேட்ட யோசியா, அனைவரையும் ஆலயத்திற்கு வரவழைத்து, கர்த்தருடைய பிரசன்னத்தில் அவரது வார்த்தையை வாசித்தான். உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தபடியே தானும் தன் ஜனங்களும் நடப்பதாக உறுதிமொழிந்து, மறுபடியுமாக அந்த உடன்படிக்கையை புதுப்பித்துக்கொண்டான். அத்துடன், தேசத்தின் எல்லையெங்கும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் அறவே அகற்றினான். அதன்பின் பஸ்கா அனுசரிக்கப்பட்டது. அதுபோன்ற பஸ்கா சாமுவேலின் நாட்களுக்குப்பின் அனுசரிக்கப்பட்டதில்லை என 2 நாளாகமம் 35:18ல் நாம் வாசிக்கிறோம்.
அன்பானவர்களே, கர்த்தருடைய வார்த்தை ஜீவனுள்ள வார்த்தை. அது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கூர்மையானது. அது நமது ஆத்துமாவை உருவக்குத்தி நம்மை மனந்திரும்புதலுக்கு நேராக நடத்துகின்றது. மனந்திரும்புதலே எழுப்புதலுக்கான முதல் படியாகும். எனவே, நாம் ஒருபோதும் கர்த்தருடைய வார்த்தையைத் தள்ளிவிடாமல், அது என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்க கவனமாக இருப்போமாக.
ஜெபம்: தேவனே, பல நாட்களாக நான் உமது வார்த்தையை அசட்டைப்பண்ணிவிட்டதை அறிக்கையிடுகிறேன். அதற்காக மனம் வருந்துகிறேன். மன்னியும். வார்த்தையே என் வாழ்க்கைக்கு உறுதுணை என்பதை அறிந்தேன். இனி அதின்படி நடக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments