திங்கள், ஆகஸ்ட் 18 || நம்பிக்கையோடே இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்!
- Honey Drops for Every Soul

- Aug 18
- 1 min read
வாசிக்க: 1 யோவான் 5: 14-15
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் .. ஆவியினாலே ஜெபம்பண்ணி... விழித்துக்கொண்டிருங்கள். - எபேசியர் 6:18
ஜெபிப்பது வேறு, மன்றாடுவது என்பது வேறு. வார்த்தைகளால் ஜெபிப்பதற்கும் வாக்குக்கடங்காத பெருமூச்சோடு வார்த்தைகளின்றி ஜெபிப்பதற்கும் வித்தியாசமுண்டு. (ரோமர் 8:26) பொதுவான வகையில் ஜெபிப்பதும், ஜெயம் கிடைத்துவிட்டது, கேட்டதைப் பெற்றுக்கொண்டோம் என்ற உறுதி கிடைக்கும்வரை விடாப்பிடியாக ஜெபிப்பதும் வேறுவேறானவை என்று எழுதுகிறார் சாரா மூர் என்ற பெண்மணி.
ஜெபம் என்பது ஒரு போர்முனை. நாம் அதில் போர்வீரர்கள்.
நமது எதிரி சாத்தான். நாம் பயன்படுத்தும் போராயுதங்கள் இவ்வுலகத்துக்கு உரியவைகளல்ல. நமது யுத்தம் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல; துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும், வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும், அந்தகார லோகாதிபதிகளோடும் உள்ள யுத்தம். (எபேசியர் 6:12) தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொள்ளாமல் இந்த யுத்தத்தில் ஈடுபடுவது ஞானமற்ற செயல். இந்த சர்வாயுத வர்க்கம் ஜெபமின்றி முழுமையாவதில்லை. விடாப்பிடியான ஜெபமே சாத்தானுடைய வல்லமையில் கட்டுண்டிருக்கும் ஜனங்களை விடுவிக்கிறது. நாம் ஜெபிக்கையில், அறுவடைக்கு எஜமான் ஜெபத்தைக் கேட்டு ஊழியர்களை எழுப்புகிறார். (லூக்கா 10:2) நாம் ஜெபிக்கும்போது ஊழியர்களை அவர் வல்லமையினால் நிரப்பி பயன்படுத்துகிறார். நாம் ஜெபிக்கும்போது அடைபட்டிருக்கும் சுவிசேஷ வாசல்கள் திறக்கின்றன; பாவத்தின் பிடியிலிருந்து ஆத்துமா விடுதலையாகிறது. நாம் ஜெபிக்கும்போது ஆவியானவரின் வல்லமையினால் பெரும் எழுப்புதல் ஏற்படுகிறது!
எனவே, நண்பர்களே, ஜெபிப்பதில் நாம் உண்மையைக் காப்போம். நம்மில் அநேகருக்கு பிரசங்கம் செய்யமுடியாது. ஆனால் நம் அனைவராலும் ஜெபிக்கமுடியும்.
இடைவிடா ஜெபமே கர்த்தர் எதிர்பார்க்கும் காரியம்.
எனவே, அவருடைய பிள்ளைகளாகிய நாம் தினமும் ஜெபிப்போம். விடாமல் ஜெபிப்போம். விசுவாசத்துடன் ஜெபிப்போம். ஜெபமே ஜெயம்.ஜெபம்: தேவனே, லூக்கா 22:44ல் இயேசு கெத்சமெனே தோட்டத்தில் ஜெபித்தபோது அவரது வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையில் விழுந்தது என வாசிக்கிறேன். நானோ ஜெபத்தில் மிகவும் குறைவுபட்டிருக்கிறேன். ஜெப ஆவியை எனக்குள் ஊற்றும். போராடி ஜெபிக்க கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments