திங்கள், ஆகஸ்ட் 11 || ஜெபத்தில் தரித்திருக்க எனக்கு உதவிசெய்யும் தேவனே!
- Honey Drops for Every Soul

- Aug 11
- 1 min read
வாசிக்க: ஏசாயா 64: 1,2
தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி.. பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படி செய்யும். - ஏசாயா 64:2
ஏசாயாவின் காலத்தில், இஸ்ரவேலர் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய ஆலயத்தைப் புறக்கணித்து, பாகாலை வணங்கினார்கள். கோபம்கொண்ட கர்த்தர், எதிரிகளின் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுக்கப்போவதாகக் கூறி பலமுறை எச்சரித்தும், அவரை அசட்டை பண்ணினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கர்த்தர் வானத்தைக் கிழித்து இறங்கி வந்தாலொழிய, தமது பிரசன்னத்தினால் ஒரு பெரிய எழுப்புதலைக் கொண்டுவந்தாலே தவிர இந்தப் பிரச்சனை தீராது என்று உணர்ந்துகொண்டான் ஏசாயா. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்நாட்களும் ஏசாயாவின் நாட்களைப்போலவே இருக்கிறது. தவறான உபதேசங்கள் மலிந்து, கள்ளப்போதகர்கள் பெருகியிருக்கின்றனர். எனவே, விசுவாசிகளும் நிலைமாறிப்போகிறார்கள். பலர் கர்த்தர்மீதான தங்களது வாஞ்சை மற்றும் வைராக்கியத்தை விட்டுவிட்டார்கள்; அன்பில், அர்ப்பணிப்பில் பின்வாங்கிப் போய்விட்டார்கள். எத்தனை ஆவிக்குரிய கூட்டங்கள் நடத்தியும், எல்லாம் வீணாகப்போகின்றன. கர்த்தரே இறங்கி வந்தால்தான் எழுப்புதல் ஏற்படும் என்ற நிலை. அப்படியானால், ஏன் அவரால் இறங்கி வரமுடியவில்லை? ஏசாயா 64:7ல், உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்ளும்படிக்கு விழித்துக் கொள்ளுகிறவனும் இல்லை என்று கூறப்பட்டிருப்பது இன்றும் உண்மையாக இருக்கிறது. அதாவது, ஜெபக்குறைவே எழுப்புதல் வர மிகப்பெரிய தடையாயிருக்கிறது. முந்தைய காலங்களில் இருந்த ஜெபவாஞ்சை இன்று கிறிஸ்தவர்களிடையே குறைந்துவிட்டது.
அன்பானவர்களே, நம் மெத்தனத்தைவிட்டு ஜெபவீரர்களாக மாறுவோம். எனவே, நாம் விழித்துக்கொண்டு நமது சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தி ஜெபத்தில் தரித்திருப்போம். வானத்தைக் கிழித்திறங்கி, கர்த்தர் நமது தேசத்திலும் பெரிய எழுப்புதலைக் கொண்டுவருவார்.
ஜெபம்: தேவனே, என் முகத்தை உம்மைநோக்கித் திருப்பி, ஊக்கமாக ஜெபிக்க கிருபை தாரும். பிசாசுக்கு பயப்பட்டு சும்மா இருந்துவிடாமல், என் இதயத்தில் வாஞ்சையுடன், உள்ளத்தில் வைராக்கியத்துடன் என் தேசத்தில் ஒரு எழுப்புதலை நீர் தரும்வரை விடாப்பிடியாக ஜெபிக்க உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments