திங்கள், அக்டோபர் 13 || கர்த்தருடைய வழியில் நடப்பது
- Honey Drops for Every Soul
- 5 days ago
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: உபாகமம் 10: 12-21
இப்பொழுதும் இஸ்ரவேலே, ... கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து ... என்பதையே அல்லாமல், வேறே எதை ... உன்னிடத்தில் கேட்கிறார். - உபாகமம் 10:12,13
இந்த வசனங்களில் இஸ்ரவேல் மக்களிடம் அவர்களது உடன்படிக்கையின் பொறுப்புகளை நினைப்பூட்டுகிறான் மோசே. தேவன் அவர்களைத் தெரிந்துகொண்டு, மீட்டெடுத்து, ஒரு தகப்பன்போல வனாந்தரத்தில் அவர்களைப் பராமரித்தார். ஆனால், அவர்கள் விக்கிரகங்களுக்கு நேராகத் திரும்பி, அவருக்கு விரோதமாய் முறுமுறுத்து, அவருடைய கட்டளைகளுக்கு எதிர்த்து நின்று மீண்டும் மீண்டும் தங்கள் துரோகத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், தேவன் தமது இரக்கத்தினால் அவர்களைப் புறம்பே தள்ளிவிடவில்லை. மாறாக அவர்களைத் தம்மிடம் திரும்பவும், தமக்குப் பயந்து நடக்கவும், தம்மில் அன்புகூரவும், தம்மைச் சேவிக்கவும், அவர் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அழைத்தார். மகத்துவமும், வல்லமையும் உள்ள தேவன் அவர்; பட்சபாதம் பண்ணுகிறவர் அவர் அல்ல! அவர் திக்கற்ற பிள்ளைக்கும், பெலவீனருக்கும் நியாயம் செய்கிறவர்; எனவே, அவர்களும் அந்நியர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் நேசிக்கவேண்டும் என விரும்பினார். ஆண்டவர் இயேசுவும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக... உன்னிடத்தில் நீ அன்புகூருவதைப்போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று மத்தேயு 22:37,39ல் இதையே எதிரொலித்தார். இஸ்ரவேலர் சில சடங்காச்சாரங்களைக் கடைப்பிடிப்பதாலும், பலிகளாலும், காணிக்கைகளாலும் தேவனைப் பிரியப்படுத்த நினைத்தனர். ஆனால், அவர்களிடத்தில் வெளிப்புறச் சடங்குகளையல்ல, உள்ளான மனந்திரும்புதலை, புதுப்பித்தலை எதிர்பார்த்தார் தேவன். வசனம் 16ல் அவர், நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம் பண்ணுங்கள் என்றார்.
அன்பானவர்களே, இன்றைக்கு நமது அழைப்பு எந்த விதத்திலும் வித்தியாசமானது அல்ல. தேவன் நம்மைத் தமது வழிகளில் நடக்கவும், தமது வார்த்தைக்குக் கீழ்ப்படியவும், தம்மில் ஆழமாய் அன்புகூரவும், தம்மை உத்தமமாய் சேவிக்கவும் அழைக்கிறார். நம் செய்கைகள், தேவன் நம்மை மீட்டெடுத்த கிருபையின் நன்றியறிதலாக பெருக்கெடுக்க வேண்டுமேதவிர பயத்தினால் அல்ல. இஸ்ரவேலை மீட்ட தேவன், கிறிஸ்துவின் மூலம் நம்மையும் மீட்டுக்கொண்டார். அவரது நன்மைகளை நம் வாழ்வில் பிரதிபலிக்கவும், நம் அனுதின நடக்கையின் மூலம் அவருக்கு மகிமையைக் கொண்டுவரவும் அவர் விரும்புகிறார்.
ஜெபம்: ஆண்டவரே, பயத்துடனும், அன்புடனும் உம் வழிகளில் நடக்க எனக்குக் கற்றுத்தாரும். என் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் உம்மில் அன்புகூர, உமது அன்பை மற்றவர்களுக்கு பிரதிபலிக்க உதவும். உமது நன்மைக்கும் கிருபைக்கும் சாட்சியாக என் வாழ்வு அமையட்டும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments